Monday, February 21, 2005

புனைவு - 15

கழியும் பழையது
பண்பாடு

இந்த மாநகருக்கு என் வாழ்க்கையின் முதல் வேலையை எடுத்துக்கொண்டு வந்தபோது, நான் மாணவப்பருவத்தின் பழக்கத்திலிருந்தும் கிறக்கத்திலிருந்தும் இன்னும் வெளிவராதவனாகவேதான் இருந்தேன். இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு, நான் கல்யாணம் செய்துகொள்ள மூன்று வருடங்கள் இருந்தபோது. மாநகரத்தின் மத்தியிலே வேலையென்றாலும், புறநகரிலே வாழ்ந்துகொள்வதுமட்டும்தான் அமெரிக்காவிலே பாதுகாப்புக்குரியதும் கட்டுப்படியானதுமாகும் என்று ஏற்கனவே இங்கே வாழக்கற்றுக்கொண்ட சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். நானும் சூரியகுமாரும் இரண்டறை-ஒரு குடிலிலே, மாதச்சம்பளத்தின் காலிலும் சமையல்மணம் சட்டையிலும் என்று வாசம் செய்ய முடிந்தது. வாரநாட்கள் போதாமலும், மீதிநாட்கள் போகாமலும் இருக்கின்ற மிகுதுயர் வேறு அமெரிக்கப்பிரமச்சாரியத்துக்கு உண்டு. அதனால், வார இறுதிகளிலே, மாநகரத்துத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவிலே திரையிடப்படும் தமிழ்ப்படங்களைப் பார்க்கவும், சூரியகுமாருடன் கூடி மொட்டைத்தலைக்குஜராத்தி ஆலயத்துக்கும், -அதன்பின்னர்- இரவிலே மாறுவேடத்திலே இயற்கைநடனங்கள் காண நகர்வலமும் போவதுண்டு. Dr. Jekyll and Mr Hyde என்பது போன்ற இரட்டைத்தினச்சீவியம் எமதான வாரஇறுதி.

ஆரம்ப காலத்தில் மொழிப்பற்று என்பதற்கான எனது வரைவிலக்கணத்தை அத்திவாரம் போட்டு, சுவரெழுப்பி நிறுத்திவைத்திருந்ததெல்லாம், எனது ஆறாம் வகுப்புத்தமிழறிவும் அந்தக்கால்த்து அரசியற்கூட்ட ஆவேச உரைகளுமே. அதனால், ஒரு சமயத்திலே, தமிழ்ப்படம் திரையிடுவதிலும்விட இன்னும் கொஞ்சம் முன்நோக்கிக் கால் வைத்து, அமெரிக்காவுக்கு -மகனிடமோ, மருமகனிடமோ- வந்துபோகும் தமிழிலக்கியத்தின் ஏகபோகப்பிரதிநிதிகளை, பசுபிக் கடலுக்கும் அத்திலாந்திக் கடலுக்கும் இடையிலே கடக்கையிலே வலைபோட்டுப் பிடித்து, இங்கே பேரேரிப்பக்கமும் கூட்டிக்காட்டி அனுப்பினால் என்ன என்று கொஞ்சம் ஆசை எனக்குள்ளே பிடித்திருந்தது. நாங்கள் இருந்த புறநகரிலேயே, தமிழ்ப்பாட்டுகளைத் தமது காரின் உள்ளே நிதமும் கணமும்பிரியாத, ஒரு நூறு -இருபத்தைந்து வயதுதாண்டிய- மாதக்கூலிச்சீவியர்கள் இருந்ததால், இது மிகவும் இலகுவாக நிகழ்த்திக்காட்டக்கூடிய செயலென்று எண்ணிக்கொண்டேன். சிறுதுளி செவ்வக்கினிக்குஞ்சை, செலுலோசும் செத்த இற்றமரத்துப்பொந்துக்குள்ளே புசுபுசுவென்று பற்றியென்று சொல்லிச் சத்தமின்றிப் பொத்திவைக்கிற மாதிரி ஒரு சுகவேலை, இல்லையா?

தன் பதிலபிப்பிராயமாக, சூரியகுமார் வதக்/ங்கிக்கொண்டிருந்த சமையலையும் நோக்காது, "உனக்கு வேறு தொழில் இல்லையா?" என்றான். மிகுதிப்பேரிலே பலர், இத்தனைநாட்கள் கழித்து, அண்மைக்காலங்களிலே, தைப்பொங்கல் ஒன்றுகூடல்களின்போது, "அப்போது, என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க்லாமே" என்று கவலை தெரிவிக்கின்றபோதும்கூட, “அதற்கான இப்போதையச் சாத்தியம் எப்படி?” என்று கேட்கின்ற ஆளில்லை நான். ஒன்றென்ன, ஓராயிரம் வார்த்தைகளே தெரிவித்திருக்கலாம்தான். என்ன செய்வது? அப்போது எனக்குத் தெரியாமற் போய்விட்டது; பதிலிறுப்பியின் பதிப்பியிலே விட்ட வரித்தொலைபேசிச் செய்திகளுக்கு என்னவென்று கேட்க நேரமில்லாமல் நாளாந்த வேலை என்று சொல்லிக்கொள்கின்றவர்களுக்கு இதற்கும் நேரம் இருந்திருக்காது என்று தவறாக எண்ணிக்கொண்டேன்.

காலம் செல்லச்செல்ல, இந்த மொழிப்பற்றிலே மண்புற்று வளர்ந்தது மட்டுமில்லை, உள்ளங்கைச்சுண்டலுக்கும் கெண்டைக்கால் மினுங்கும் பெண்டிர் முகத்துக்குமாய், குஜராத்தி பஜனுக்கு, தாளம் தட்டுவது எல்லாம் குறைந்துகொண்டுபோய், barbecue, golf என்கிற மாதிரி ஒரு பிறதேசப்பண்பாட்டுவலயம் எனக்குட் படையெடுத்து விளைந்ததோடு நிற்கவில்லை; American Football, Basketball என்பவற்றினை, பெண்-பந்து-பூனை விளம்பரங்களுக்கிடையேயும் திகட்டத் திகட்டப் பார்த்தபடி, இருக்கையின் நுனியிலே குந்தியிருந்ததுக்கும் குற்றம் சொல்லி, இறுதிப்புள்ளிக்காக எழும்பி குதிக்கும் தன்மைகூட எனக்குட் பரந்து சடைக்கத்தொடங்கிவிட்டது. இதனால், சூரியகுமாரும் நானும் பொருளாதாரக்காரணங்களை முன்னிட்டுமட்டும் ஒரு தீவு-இரு நாடு போல ஆளையாள் காலைப்பொழுதும் மாலைக்கழிவிலும் சந்திக்கவேண்டி, ஒற்றைக்கதவுக்குப்பின்னால், ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருந்தோம்.

ஆனாலும், வார இறுதித்தமிழ்ப்படங்கள் அனைவரும் அறிந்ததுபோலவே பன்முக நோக்கத்தவை; தவிர்க்கமுடியவில்லை. அழுது நடிப்போர், பாடல் படிப்போர் - இவர்களைத் தவிர மீதியெல்லாவற்றையும் எல்லாம் தசவதானியாக உள்வாங்கமுடிந்தது. ‘இந்தக்கிழமை என் வாகனத்திலே போனால், வரும் வாரம் உன் வாகனம்’ என்ற விதத்திலே இருவரும் போனதிலே மாதத்துக்கு எவ்வளவு செலவைக்குறைக்க முடிந்தது (முடிந்ததா?) என்பது இன்றைக்கு ஞாபகத்திலே இல்லை. ஆனால், ஆளுக்காள் பேசாமலே அருகருகே அமர்ந்து அன்றைய இரவு காணப்போகும் நடனங்களை எண்ணிக்கொண்டு போனது மட்டும் இன்னமும் எனக்கு நினைவிலே இருக்கின்றது [கூடவே, எங்கள் காரைக் கண்டவுடன் சிவப்புவிளக்குகளைச் சுடரவைக்கும் போக்குவரத்து சமிக்ஞைக்கம்பங்களின் அம்மாக்களின் நடத்தைகளினைப் பற்றி அபிப்பிராயம் காரின் அமர்முடுக்கிக்குக் காலாற் சொன்னதும்].

சூரியகுமார், கதாநாயகி அழும்போது கலங்கி, படம் தொடங்க முதலும் பிறகும் வரும் இளங்குமரிகளைக் கண்டபோது சிரிக்கவும் கூடியவன். நான் முழுக்க அப்படியான ஆளில்லை. கதாநாயகி அழுகின்றபோது, உலகை ஓர் அரை வட்டம் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் அடித்து வந்து, F1 இலேயிருந்து H-1B க்கும், H-1B இலே இருந்து பச்சைக்கும், பச்சையிலே இருந்து முழுப்பாதுக்காப்புக்கும் கவனம் வைக்கிற என்னைப்போன்ற ஏனைய இலட்சியவாதிகள் கலங்குகிறதைப் பார்த்துச் சிரிப்பது, ஒரு திருப்தியை எனக்குட் தருவதுண்டு. படம் முடிந்தபின்னர், வந்த வதனங்களினைத் தரிசிக்கும் கணங்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறது மட்டும் மற்றோரோடு எனக்கும் பொது. திரும்பவரும்போது, சூரியகுமாருக்கும் எனக்கும் பேச எத்தனையோ விடயங்கள் பொதுவாக இருக்கின்றது தெரியவரும்; எவ்வளவு புரிந்துணர்வு உள்ள நண்பர்கள் என்பதுவும்தான்; பிறகு, அன்றைக்குச் சமையல் யார் என்பதிலே அ·து அப்படியே அழுங்கி முழுதாய் இனி முளைவிடாது என்பதுபோல் மறைந்தும்போகும்.

இப்படியாய் இயல்பாகிப்போன வாழ்க்கைச்சூழலிலே, ஏதோவொரு சேவல்-கோழி கேவற்படம் முடிந்தபின்னர், காரிலேறுமுன்னர் உந்தலிலே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த என்னிடம், சூரியகுமார் சாந்தகலாவைக் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகம் செய்தபோது, அவசரவசரமாக புகையை இடக்காற்சப்பாதின் கீழே புதைத்தேன். “வணக்கம்” சொன்னேன். கையைக் கூப்பி பெண்களுக்கு வணக்கம் சொல்ல சொந்தநாட்டைவிட்டு நகர்ந்தபின்னரே கற்றுக்கொண்டேன். இதைப்போலவேதான், எனது பண்பாட்டின் பக்கவிளைவுகள் பலதினையும் நாட்டுக்கு வெளியேதான் நான் மிதந்துதிரியக் கண்டு, கௌவிப்பிடித்து கைக்கொண்டேன் என்பதையும் வெட்கத்தினை விட்டு ஒத்துக்கொள்ளவேண்டும். அமெரிக்கநண்பர்கள் எனது பண்பாட்டின் தொன்மையினைப் பற்றிக் கேட்டகேள்விகளுக்கு, ஒரு வரிக்கேள்விக்கு ஒன்பது நிமிடங்கள் என்ற ரீதியிலே விபரமாகப் பதில் சொல்லிவிட்டு “விபரம் தெரிந்தவனாக” வெளியே வந்து, வேறு யாரிடமிருந்தாவது அவற்றிற்கான விடையினைக் கற்றுக்கொண்ட காலமும் அநேகம்.

“கலாவுக்குத் தமிழ்பேசவராது” –சூரியகுமார்.

எனது ஒரு தென்னாசியனின் பெண்ணின் மீதான மதிப்பினை, பண்பாட்டின் ஒற்றைக்குறியீட்டூடாக, கையைப் பொத்திக்குவித்துக் காட்டமுடியாது போனது கவலைதான்.

“ஹலோ.”

கையைக் கொடுத்தேன். இறுகப் பற்றி உறுதியாக, அதே நேரத்த்திலே தன் மென்மைகீழ் வழுவாது குலுக்கினாள். நான்தான் எனது ஆளுமையைச் சரியாக வெளிப்படுத்தாது, தொய்வுடன் உள்ளங்கையிலே இரத்தோட்டத்தைக் குறைத்துவிட்டேன் என்று தோன்றியது.

ஆங்கிலத்திலே “பேச வராது; ஆனால், பிறர் பேசுவது புரியும்” என்றாள்; பிறர் பேசுவது சரி; நான்? மொத்தமாக, எனக்கே நான், என்ன சொல்கின்றேன் என்று புரிய இரண்டு நாளெடுக்கும்; ஏன் சொன்னேன் என்று புரிய இன்னும் இரண்டு நாளெடுக்கும்.

“அதிசயம்; பேசுவதா பெரியவிடயம்! அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்தும், சொந்தமொழியைப் புரிந்து கொள்கின்றீர்கள் என்பதே மிகவும் ஆச்சரியத்தினையும் ஆனந்தத்தையும் தருகின்றது. இத்தனைவருட இந்நாட்டு வாழ்க்கையிலே இப்படியான ஒரு பெண்ணைக்காண்பது இதுதான் முதற்றடவை.” அழகான பெண்ணைக்கண்டதால், உள்ளபடி உண்மை வந்ததா, இல்லை உளறிக் கொட்டினேனா என்று எனக்குப் பிடிபடவில்லை. நான் முன்னமே சொல்லவில்லையா, நான் என்ன பேசுகின்றேன் என்று எனக்கே புரியவில்லை என்று?

“நன்றி; என் அப்பா பேசுவது போலவே பேசுகின்றீர்கள்.” (வெட்கித்தும் பெருமித்தும்) சிரித்தாள். அவள் அப்பாவின் ஆங்கிலம் இத்தனை அகோரமாக இருக்கிறதை எண்ணிக் கவலைப்படமட்டுமே முடிந்தது. என்ன மனிதர் இவர்! இத்தனை நாள் இருந்தவர் கொஞ்சம் திருத்தம் முயற்சித்திருக்கலாம்.

வீட்டிலே ஒரு பண்பாடும் வெளியிலே ஒரு பண்பாடும் என்று கலந்து பொரு(ந்)த, மிதமாய் காவியங்களிற் கதைபுனையப்பட்ட அன்னப்பட்சி தண்ணீரைத் தவிர்த்து தனக்கு வேண்டியதைமட்டும் தனித்தெடுத்து உண்டதுபோல வளர்ந்துகொண்ட பெண்களின் நடை உடைபாவனைகள் எனக்குப் பிடித்த பிரமச்சாரிய காலம் அது.

அண்மையிலே உள்ள பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்திருப்பதாகத் தெரிந்தது. பெற்றோர் வசிப்பது கிழக்கமெரிக்காவின் கீழ்க்கரை. பனியைப் பற்றிக் குறை சொன்னாளா, உயர்த்திச்சொன்னாளா என்பது எனக்குப் புரியவில்லை; எனக்குப் பணியைப் போலவே, அவளுக்குப் பனி புதிதானதால் பிடித்தும் இருக்கிறது, பழகாததால் பிடியாமலும் இருக்கிறது என்று தோன்றியது. என்ன செய்வது? என்னை வைத்தே எவரையும் எடைபோட்டுப் பழகிவிட்டது.

சூரியகுமார் ஆங்கிலத்திலே, “கலா நல்ல கர்நாடக சங்கீதக்காரி; பிரபல்ய சங்கீதவிற்பனர்கள் அமெரிக்கா வரும்போது, சிலவேளை பின்னால் இருந்து தம்பூரா மீட்டும் சந்தர்ப்பங்களைக்கூடப் பெற்றவளாக்கும். பாடினால், பறக்கின்ற குயில் தோற்கும்” என்றான். எருமைத்தலையன்! பிறபறவைகளின் கூடுகளுக்குள்ளே திருட்டுத்தனமாக முட்டைபோட்டும் சோம்பேறிக் குயிலோடு இப்படிப்பட்ட இளம்பெண்ணையா எவரும் ஒப்பிடுவார்கள்? கல்யாணாமாகாமல், பருவக்கோளாற்றிலே பிள்ளையைப் பெற்றுவிட்டு, அனாதை ஆச்சிரமங்களுக்கு முன்னால், ஏணை தொட்டிலே விட்டுச்செல்லும் எவளையாவது அல்லவா ஒப்புவமை சொல்லவேண்டும்! இந்த மடையனின் மூளை!

நான் பாடக்கேட்டுவிடுவேனோ என்று பயந்தோ என்னவோ, “அப்படியெல்லாமில்லை; ஆனால், முழுமையாகச் சங்கீதம் கற்றிருக்கின்றேன் என்பது மட்டுமுண்மை; அப்பா, எங்களூர்த்தமிழ்ச்சங்க்த்தலைவர். அதனால், சிலவேளை சங்கீதவிற்பனர்களின் தம்பூராக்காரர்களுக்கு இயலாதவிடத்து, நான் தம்பூரா மீட்டுவதுண்டு.” உண்மையான பெண்; சுத்தி வளைத்து சுத்தப்பொய்யை சேற்றுச்சுவற்றுக்கு வெள்ளை வர்ணம் தீட்டுவதுபோல சிதப்பாமல், “இவ்வளவுதான் நான்; இதுக்குமேலுமில்லை ஏதும்; கீழுமில்லை ஏதும்” என்று சொல்கின்றது இன்னொருவரைக் –குறிப்பாக, சங்கீதம் முறைப்படி கற்றுக்கொள்ளாத, குரல்வளம், கலைநயம் கட்டித்தோயக் கற்றுக்கொண்டோரெல்லாம் பாக்யவான்கள் என்றெண்ணிக்கொள்ளும் பிரமச்சாரிய இளைஞர்களை- கவரக்கூடிய பண்பு.

அவளது பெற்றோரின்மீதான என் மதிப்பு அதிகரித்தது. ஒருவருடவேலைக்குள்ளே கிடைக்கும் ஓய்வுநேரத்திலேயே, ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வுக்கும் ‘Home run’ பற்றி புள்ளிவிபரம் சேர்க்கும் மனிதனாக மாறிப்போன நானெங்கே, முப்பதுவருடங்களாக, அதற்குமுன்னே இருபத்தைந்து வருடங்கள் பழகியிருந்த உலகத்தைப் பேணிவைத்திருக்கும் இந்த மனிதர்களெங்கே? தன் மொழியே பேசவராதபோதும், தம்மிசையைப் பொத்திப் போற்றிக் கற்றுக்கொடுத்த அவர்களை, அறியாதபோதும் உள்ளாரப்பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

சூரியகுமார் அவளை விடுவதாயில்லை; “நீங்கள் நல்ல கர்நாடக சங்கீதத் “துண்டுகள்” இரண்டு பாடித்தான் ஆகவேண்டும், கலா; இல்லாவிட்டால், நாங்கள் உங்களை இங்கிருந்து போகவிடமாட்டோம்” - அங்கிருந்து அவள் கொஞ்சம் தரித்துப் போவதிலே எனக்கு சம்மதந்தான்; ஆனால், என்ன இருந்தாலும், நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் அறியவந்த ஒரு பெண்ணைப் போகவிடமாட்டேன் என்று சொல்லக்கூடிய துணிவும் தொந்தரவுத்தன்மையும் உள்ள ஆளில்லை; என் சொந்த வாக்குக்கும் சேர்த்து அவன் தனது புள்ளடியை அவள் காதிலே போட்டு முகத்திலே வழிந்த மையைத் துடைத்துக் கொண்டான்.

கடவுளே இதுவென்ன கஷ்டம் என்றோ, அல்லது இதற்குத்தான் காத்திருந்தேன் என்றோ, ஒரு சிறு செருமலுடன் (இந்தக்குறித்த கணத்திலே, இவளின் இயற்கையத்த ஓரிணை ஏகாரச்செருமலுக்கு முன்னால், என்ன இன்பத்தைச் சங்கீதம் விளைவிக்கும் என்று நான் எண்ணியதேதோ உண்மைதான்), பாடத்தொடங்கினாள்.

அவளின் எத்துணை குரலினிமையானது என்பது அதற்குப்பின்னும் இன்னும் எத்தனையோ மேலதிகாரிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ஏச்சுகளுக்கும் கீழே இன்னமும் என செவிப்பறையிலே ஒட்டியிருந்து, அவ்வப்போது கீச்சுக்கீச்சுமூட்டுவதுண்டாதலால், சொல்லிலே உணர்த்தமுடியாதது. ஆனால், அவளின் பாடலின் அர்த்தம் பாடல் மொழி காரணமாகப் புரியவில்லை.


பாடிமுடிந்தபின்னர், “மிகவும் அற்புதமான குரல்வளம்” என்றேன். பிறகு ஒர் ஐந்து நிமிடங்கள் சூரியகுமாரின் புகழாரத்துக்கு ஒதுக்கியபின்னர், “இப்போது பாடியது, சூரியகுமாருக்காக; இனி, எனக்காக இன்னொரு பாடல் பாடமுடியுமா” என்று குரலிலே வேண்டுதலும் விழைவும் தொனிக்கக் கேட்டேன். எனக்கு சிலர் மறுக்கமுடியாமல், கனிவாகக் கேள்வியைப் போடும் சித்துவித்தைக்ள் சில சமயம் கைவருவதுண்டு,

இந்தத்தடவை; அறிந்தமொழியினூடேயும் அவளின் குரல்முடிச்சு அதிர்வுகளின் மீட்டலைக் கேட்க, செவிச்சுவை திகட்டும் உச்சத்தை முட்டித்தட்டித்த்ள்ளும் என்றெண்ணிக்கொண்டது எனது அடிப்படை அளவுகோல். திரும்பவும் எனக்குக் கருத்துப்புரியாமே பாடவேண்டும் என்பதுபோல அவளின் குரல்நடவடிக்கை. கொஞ்சம் உள்ளம் சுருங்கிப்போனேன்; ஆனால், காட்டிக்கொள்ளூம் உரிமை எனக்கு இல்லை; தானம் கொடுக்கும் மாட்டிலே பல்லைப் பிடித்து, அவதானம் இல்லாத மூடன்தான் எண்ணிப்பார்ப்பான்.

ஆனால், பாடல் முடிந்ததும், பாராட்டுக்குப் பின்னால், கேட்காமல் இருக்கமுடியவில்லை. ஆனால், அவளின் உள்ளம் சிறிதும் சுரண்டுப்பட்டுக்கொள்ளாமற் கேட்கவேண்டும். “மகாகவி பாரதி அழகுவாய்ந்தது என்று பாராட்டியது இந்த மொழி,” எனது சுளுவான பேச்சுக்கு என்னையே நான் பாராட்டிக்கொண்டேன். “பாரதி?? அது ஒரு பெண்ணின் பெயரல்லவா?” இல்லை; எனது குழியைத்தான் நான் வெட்டியிருக்கிறேன்; நேரடியாகவே கேள்வியைக் கேட்டிருக்கலாம். இதற்குள் சூரியகுமார், பாரதியைப் பற்றி விபரமாக, எட்டையபுரம் தொடக்கம், யானை மிதித்தது வரை ஒரு சின்ன உரை நிகழ்த்தினான். ஆர்வமாகக் கேட்டாள்; அவனின் உற்சாகவேற்றலுடன், நான் எனது கேள்வியை நேரடியாகவே போட்டே;. “இந்தப்பாடலின் கருத்து உங்களுக்குப் புரிகின்றதா?”

அவளின் நாவுக்குப் பதிலாக முகமும் முழுத்தலையுமே பதிலைச் சொன்னது. பிறகு சொன்னாள், “இந்த இருபாடல்களும் சங்க விழாக்களிலே, பாடகர்களிடம் மிகவும் வேண்டிக் கேட்கப்படுகின்றவை.” அதனால், அவற்றினைக் கருத்தறியாதபோதும் பாடிய பெருமிதம் அவளிடம் தெரிந்தது. “தமிழ்ப்பாடல் ஒன்று பாடிக்காட்டவேண்டும்; உங்கள் தமிஉச்சரிப்பு எப்படி இருக்கின்றதென்று பார்ப்பதற்கு” என்று நகைச்சுவையாகப் பேசுகின்றேனாம் என்ற தோரணையிலே எனது அடுத்த வேண்டுகோள்.

“பாட எனக்கும் விருப்பம்தான்; ஆனால், அதற்கான முறையான பயிற்சியில்லையே? கல்கியும் அண்ணாமலைச் செட்டியாரும் செத்தே எத்தனை வருடங்கள் ஆகின்றன? என்ன பெற்றோர்... இந்தளவு அறியாதமொழியிலே பாடச்சொல்லிக்கொடுக்கும் ஆர்வத்தோடு இருக்கின்றவர்கள், இப்படியா, ஒரு தமிழ்ப்பாட்டு, குறைந்தபட்சம் ஒரு கும்மியோ கீதமோ சொல்லிக்கொடுக்கக் குருவிடம் கேட்காமல் இருப்பார்கள்?

அவளோடு வந்த சக மாணவர்கள் திரும்பிப்போவதற்காகத் தேடிக்கொண்டுவர, அவள் அதற்கிரு வாரங்கள் பின்னால் வரும் திரைப்படத்தின்போது சந்திப்பதாகச் சொல்லிப் போனாள்.

நான் காரோட்ட, சூரியகுமார் பக்கத்திலே இருந்து சள சள வென்று அவளைப்பற்றி ஆதிதொட்டு அருகிலே இருந்தன்போல, அந்நியோனியமாகப் பேசிக்கொண்டு வந்தான். எனது எரிச்சலினைக் காட்டிக்கொள்ளவில்லை; காரோட்டிகள் உளநிலையளவிலே நிதானமாக இருத்தல் அவசியம் என்று திரும்பத் திரும்ப எனக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டேன்.

“அவளது பெற்றோர்கள் எவ்வளவு அக்கறையாக எங்களது பண்பாட்டினை மறக்காமல் அவளுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்; பார்த்தாயா? “ - என்றான்.

அடக்கமுடியாமல், “மொழிக்கும் பண்பாட்டுக்கும் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் உள்ள நெருக்கம்போலும்; பண்பாட்டை மட்டும் எவரும் எங்கே போனாலும் தம் பிள்ளைகளுக்குப் படிப்பித்துப் பட்டம் விடவைக்க மறக்கிறதில்லை” - எரிந்துவிழுந்தேன்.

இன்னமும் அவளின் குரலிலே மிதந்துகொண்டிருந்தான் போலும். நான் சொன்னது, காதிலே ஏறாமல், “என்ன?” என்று அசிரத்தையாகக் கேட்டான்.

அவனுக்குப் பதில் சொல்லாமல், எனக்கு நானே. “பார்த்துக்கொள்; இதுதான் பொன்னகரம்!” என்று பற்றிக்கொண்டு வரச் சொல்லிவிட்டு, சிவப்பு விளக்குக்கும் நிறுத்தாமல், ஆள்நடமாட்டமில்லாத வீதியைக் கடந்ததையும்கூட அவன் கண்டுகொள்ளவில்லை.

’00 ஒக்டோபர், 06

No comments: