Thursday, March 31, 2005

படிவு - 10

பிபிஸி தமிழோசை 03/31/2005

பிபிஸி தமிழோசை
2005 மார்ச், 31
'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை'- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் வரதராஜன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசிய மட்ட மாநாடுகளுக்கு இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) அழைக்கப்பட்டிருப்பது இரு நாட்டு அரசியல் வட்டாரங்களில் முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடுகளுக்கு தற்போதே முதல் தடவையாக ஜேவிபி அழைக்கப்பட்டுள்ள போதிலும், ஜேவிபியுடன் இந்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் நீண்ட காலமாகவே நட்பு ரீதியான தொடர்பு இருப்பதாகவும், இலங்கையின் நிலைமையிலே ஜேவிபியை தாம் ஒரு இடதுசாரிக் கட்சியாக கருதுவதானாலேயே அதனுடன் நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்புவதாகவும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் கூறியுள்ளார்.

ஜேவிபியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை வைத்து அவர்களை ஒரு நேச சக்தியாக தாம் பார்ப்பதாகவும் அவர் குறிபிட்டார்.

ஜேவிபியை ஒரு சிங்கள இனவாத அமைப்பாக தனித் தமிழீழம் கோரும் அமைப்புகளே பார்க்கின்றன என்றும், ஆனால் பொதுவாக இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் அதுவல்ல என்றும் வரதராஜன் கூறினார்.

ஒரு பேரினவாத அமைப்பாக தாம் ஜேவிபியை பார்க்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜேவிபி வலியுறுத்தி வருவது உங்களுக்கு தவறாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த வரதராஜன் அவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி பெற்ற தமிழ் பகுதிகள் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும், ஜேவிபியின் இது தொடர்பான நிலைப்பாடு இறுதியானது அல்ல என்பதே தமது கருத்து என்றும், அது தொடர்பில் ஜேவிபியை சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வைப்பதில் தாம் வெற்றி பெறுவோம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலை எடுக்கக்கூடிய கட்சிகள் மற்றும் மூன்றாவது உலக நாடுகளிடையே இறையாண்மையை பாதுகாக்க போராடும் கட்சிகள் என்ற அடிப்படியிலேதான் தாம் சர்வதேச மட்டத்தில் ஏனைய கம்யூனிஸ நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் தாம் பெரிய அளவில் தலையிடுவதில்லை என்றும் வரதராஜன் கூறினார்.

ஜேவிபியின் நிலைப்பாட்டை தான் நியாயப்படுத்த விரும்பாத போதிலும், அங்கு பல சந்தர்ப்பங்களில் ஜேவிபி எடுக்கும் நிலைப்பாடு என்பது விடுதலைப் புலிகள் எடுக்கும் நிலைப்பாட்டின் எதிரொலியாக அமைந்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி: பிபிஸி தமிழோசை

8 comments:

மு. சுந்தரமூர்த்தி said...

Ramani,
Can you please send me an email? I seem to have lost your email address.

ROSAVASANTH said...

ஹி..ஹி.., என்றோ கிழிந்துவிட்ட முகமுடிகளை இப்போது ஒரு பாவனைக்காக கூட மாட்டிகொள்ளாமல் இப்படி வெளிப்படையாய் இருப்பதும் நல்லதுதானே!

வசந்தன்(Vasanthan) said...

இலங்கைத் தமிழர் எங்க இருக்கினம் எண்டு அவரிட்ட ஒருக்காக் கேட்டுச் சொல்லவேணும்.

arulselvan said...

அவர்களுடைய லெனின் எழுதிய தேசிய இனங்கள் பற்றிய சுமார் அம்பது பக்கம் கொண்ட சிறுபிரசுரம்கூட உண்டு. யாராவது நண்பர்கள் அவருக்கு அனுப்பித்தந்து உதவலாம். ஆனால் சிபிஎம் தலைவர்களுக்கு எழுதப்படிக்கத்தெரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது.

Thangamani said...

மாநாடு எங்கே மவுண்ட் ரோடு தூதரகத்தில், மார்க்சிய முனியின் சீரிய தலைமையிலா?

Anonymous said...

Ramani: thanks!!
NT: :) :)
Balaji-paari

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.

இந்தியாவின் பாராளுமன்ற அரசியலிலே குதித்த மார்க்ஸியக்கட்சிகளும் தமக்குச் சமாந்திரமான இலங்கையின் பாராளுமன்றம் போகும் மார்க்ஸியக்கட்சிகள்போல, கருத்தாக்கத்திலே காலத்திலே உறைந்து போய் நிற்கின்றதாகத்தான் தெரிகின்றன. நிறுவனமயப்படுத்தலுக்குக் கொடுக்கும் விலை இதுவென்று படுகின்றது. இயங்கு மார்க்ஸியம், தம்மைச் சுற்றிய பூமிக்கேற்றவிதத்திலே மார்க்ஸியப்பார்வையை வளர்த்துக்கொள்ளும் சிறிய மார்க்ஸிய இயக்கங்களிலேயே இருக்கின்றன என்று தோன்றுகின்றது.

வரதராஜனின் செவ்வி மிகவும் நகைச்சுவையானதாகவே படுகிறது. முன்னர், ராஜா, ராமமூர்த்தி ஆகியோரும் இதுபோலவே அடிபிசகாது இலங்கைப்பிரச்சனை குறித்த கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள். ஒரு மூன்றாம் உலகநாட்டிலே வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமையிலும்விட, அந்நாட்டின் இறையாண்மையைப் பொய்க்கேனும் கட்டிக்காப்பது அவசியமென்கிற பொய்மையை எங்கே போய்ச் சுட்டி அழுவது?! இந்திய இராணுவம் இலங்கையிலே இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர-இந்திய எதிர்ப்புநிலைப்பாடு குறித்து, இந்திய மார்க்ஸியக்கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? ட்ரொஸ்கியின் புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் எத்தனை உறுப்பினர்களை ம.தே.வி.மு. கொன்றிருப்பார்கள் என்பதை இந்த லெனினிய மார்க்ஸிஸ்டுகள் அறிவார்களா? இதுபோல வினாக்களைத் தொடுத்துக்கொண்டே போகலாம்.

கிஸோக்கண்ணன் said...

...ஜேவிபியை ஒரு சிங்கள இனவாத அமைப்பாக தனித் தமிழீழம் கோரும் அமைப்புகளே பார்க்கின்றன என்றும், ஆனால் பொதுவாக இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் அதுவல்ல என்றும் வரதராஜன் கூறினார்...

அவர் இலங்கையென்று ஆசியாவில் உள்ள இலங்கையைத்தானே சொல்கின்றார்? முந்தி கோமாளிகள்தான் அரசியல்வாதிகள் மாதிரிக் கதைப்பினம், இப்ப அரசியல்வாதிகளே கோமாளிகள் மாதிரிக் கதைகிற புதினத்தை நான் எங்கை போய்ச் சொல்ல!