Saturday, April 02, 2005

புனைவு - 23

கழியும் பழையது
தட்டாட்டம்

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாம் ஆண்டு 'நன்றிநவிலல்' தினத்தன்று புளோரிடா மாநில மியாமி நகரிலே இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஒன்றை உலகம் முழுவதும் அறியும்; மற்றையதை மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். ஆறுவயது கியூபப்பையன் ஏலியான் நகருக்குள்ளே கொண்டுவரப்பட்டபோது, இவனின் நண்பன் விடுமுறையைக் கழிக்க, ஓய்வெடுக்காத இரண்டு வருடங்களுக்குப் பிறகு மியாமியிலிருந்து நியூ ஓர்லியன்ஸ் நகருக்குப் புறப்பட்டு வந்தான்.

இருவரும் சந்தித்து ஐந்து வருடங்கள் இருக்கக்கூடும்; இவன் ஹொங்கொங்கிலே இருக்கும்போது, இலங்கையிலிருந்து அமெரிக்கா போனவனை, விமானநிலையத்திலே அவசர அவசரமாக ஒருநாள் இரவு சந்தித்தபிறகு இப்போதுதான் சந்திக்கமுடிகின்றது; நண்பனுக்கு மனைவியை அறிமுகப்படுத்தினான் என்றாலும் அது பெயருக்கு மட்டும்தான்; முன்னமே மூன்று வருடங்களாக, அவளைப் பற்றி நண்பனுக்கும், நண்பனைப் பற்றி அவளுக்கும் விபரமாகச் சொல்லியிருக்கின்றான். வந்த அன்றைக்கு இரு பழைய நண்பர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதை உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை; ஆனால், அவன் மனைவிக்கு அன்றைக்கு அவன் ஒரு பரிச்சயமில்லாத புது ஆள் மாதிரித் தெரிந்தான், ஒரு மேற்தோலையுரித்துக்கொண்ட பாம்புபோல - பாதி அவனின் அதியுற்சாக நடத்தையினால், மீதி நண்பனிடமிருந்து அவனைப் பற்றித் தெரிந்து கொண்ட, இதற்குமுன் அவளறியாத சின்னச்சின்ன விடயங்களிலிருந்து..... அவன் வானொலியிலே பழையபாட்டுகள் போகும்போது இலயித்திருந்து கூடவே தானும் பாடிக்கொண்டு, மேசையிலே கைவிரல்களாற் தாளம் தட்டக்கூடியவன் என்று அன்றைக்கு வரைக்கும் அவளுக்குத் தெரியாது; மூன்றுபேரும் இருந்து சாப்பிட்ட அன்றைய இரவினைத் தவிர மீதி நேரமெல்லாம், அவள் தனியே இருந்து 'வரலாற்று' அலைவரிசையிலே 'மேபிளவர்' கப்பலிலே அமெரிக்காவுக்கு வந்தவர்களைப்பற்றியும் காட்டுவான்கோழியினைப் பற்றியும் நித்திரை வரும்வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்கள் எப்போது தூங்கினார்கள் என்று அவளுக்குத் தெரியாது; இடையிடையே பலத்த சிரிப்புச்சத்தங்கள் மட்டும் கொஞ்சம் அவளை அதட்டி அதக்க, திரும்பி மறுபுறம் படுத்துத் தூங்கினாள்.

மறுநாட் காலையிலே, இடைக்கிடையே விக்கல் எடுப்பதுபோல, ஆளையாள் 'அறுத்துக்கொள்ளும்' ஒரு சில கணங்களை மட்டும் கண்டுகொள்ளாதுவிட்டால், நண்பனும் இவனும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தார்கள் என்று அவளுக்குப் பட்டது; தான் கொண்டு வந்த அமெரிக்க காரோட்டிகள் கூட்டமைப்பொன்று அச்சிட்ட வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு "எங்கே போவோம்?" என்று நண்பன் கேட்டான்.

எங்கே போகவேண்டும் என்ற கேள்வி, நியூ ஓர்லியன்ஸ் மாநகரிலே கேட்பது, ஒரு மரியாதைக்கு மட்டும்தான். பிரெஞ்ச் சதுக்கம் அல்லது மயானங்கள்; அவற்றைவிட்டால், மிஞ்சின காட்சியிடங்களான போன நூற்றாண்டுத்தோட்டவீடுகள், முதலைச்சதுப்புநிலங்கள், கேஜன் கிராமங்கள் எல்லாவற்றுக்குமே ஊருக்கு வெளியே கொஞ்சநேரம் சவாரி செய்யவேண்டும்; மழைமேகமூட்டமான நேரத்திலே சரிப்படாது. 'மார்டி கிரா' கண்காட்சிக்கிராமம் மூடிக்கிடக்கும். மயானங்களின் விசேடமானது, காலமும் நிலத்துக்கு மேலே கதவுவைத்து குடும்பம் குடும்பமாய் உடல் புதைக்கும் புதுமையும் எனச் சொல்லலாம். காப்புறுதிக்காரனுக்கும் வைத்தியசாலைகட்கும் மென்பொருளிலே தரவுத்தளம் அமைத்துக்கொடுக்கும் தொல்லை இல்லாத வார இறுதிகளையும்கூட, போன நூற்றாண்டிலே மஞ்சட்காய்ச்சலிலும் மலேரியா, வயிற்றோட்டத்திலே போனவர்கள் பெயர்ப்பட்டியலைச் சரி பார்த்துக்கொண்டு, நிம்மதியைத் தின்னும் சம்பளமில்லாத சுகாதாரவைத்தியப்பரிசோதகர் தொழில் பார்க்கும் உத்தேசமும் பொறுமையும் நண்பனுக்கு இல்லாததால், 'பிரெஞ்ச் குவார்ட்டஸ்' மட்டுமே போக மிஞ்சியது.

டென்னஸி வில்லியம்ஸின் 'த ஸ் ரீட் கார் நேம்ட் டிஸையர்' நாயகன் வாழ்ந்த களமாக, எலியா காஸனின் திரைப்படத்திலே மார்லன் பிராண்டோவை வைத்துச் சித்தரிக்கப்படும் 'பிரெஞ்ச் குவார்ட்டஸ்' பெருமை-சிறுமை, வெறும் சொல்லில் அடங்காது. அதற்குக் காரணம், அதன் பிரசித்தமான நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த 'பேர்பன்' வீதியில் இரவுகளில் நிகழும் வாடிக்கையான வேடிக்கை விநோதங்கள் என்பது நாடறிந்த உண்மை. சாதாரணமான கரையோரமுதலையாக வாலை நீட்டிச் சோம்பற் தூக்கத்திற் கிடக்கும் வீதி, இரவுப்பொழுதில், நெருப்புவைத்த அனுமார்வால்; போனீர்களோ பற்றிக்கொள்ளும்.... (எதுவென்று விளக்கமாக இங்கே சொல்ல எனக்கு அனுமதியில்லை என்று நினைக்கின்றேன்). இப்படி 'மது, மாது, ஆட்டம், பாட்டு, அடிபிடி, பிடிஅடி, ஒருபால்+இருபால், முதலை கேஜன் சான்விட்ஸ், போ-போய்' என்று இரவிலும் காலைச்சூரியநிழலாய் கைவிரித்துப் பரவும் உலகு, பகலிலே பிரெஞ்சுக்கால உப்பரிகைகள், நடைபாதை ஓவியர்கள், வீதி ஜாஸ் கலைஞர்கள், மிஸிஸிப்பி நதிக்கரை நடை, தாரைதப்பட்டை இசையோடும் தெற்கத்திய உணவோடும் ஆற்றுப்படகு உலா, ஐந்து டொலர்களுக்கு இரண்டு எகிப்திய ஆரூட சரிகைச்சட்டை அம்மணிகள், ஒற்றைச்சில் வண்டிக்கழைக்கூத்தாடிகள், 'குதிரைமேல் ஜக்ஸன்' கட்டம், சந்திக்குச் சந்தி நிறம் பூசிய வெள்ளிக்கிரகவாசிகள்/ செவ்விந்தியர்கள்/சாத்தான்கள்-"அசையமாட்டோம், விழி அமர்த்தமாட்டோம்-அதற்காக விரித்திருக்கும் தொப்பிக்குள்ளே காற்பணமும் சுண்டங்காய்ச்சில்லறையும் இட்டுச்செல்க" , கண்ணை படங்குத்துண்டு மூடிய குதிரைகள் பூட்டிய வண்டில்களும் அவற்றின் டிரகுலா ஆடைச்சாரதிகளும், பேய்வாழும் மாளிகைகள், ஐந்து டொலர் தொடக்கம் மத்திய, மாநில வரிகளும் உள்ளடக்கி ஆறாயிரத்து முப்பத்தி இரண்டு டொலர் வரைக்குமான நீர்வர்ண/நெய் டிகா ஓவியங்கள் தொங்கும் படுக்கும் கூடங்கள், 'பத்துடொலருக்கு ஒரு கறுப்புமூக்குத்தி, கொரியன் எழுத்தோவியர், தேவாலயத்துக்கு வாசனைத்திரவியங்கள்' பக்கம்பக்கம்குந்தியிருக்கும் பிரெஞ்சுச்சந்தை, போய்ச்சேர 'டிராம்' வண்டி என்று விரியும். (என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூச்சு விட்டுக்கொள்கின்றேன்) நானே இந்த இடத்தை இதற்கு மேலும் விரித்துச் சொல்வதிலும்விட ஏதாவதொரு ட்ரூமன் காப்டே, அனே ரைஸ் நூலை வாசித்துப்பாருங்கள் என்று கேட்பது உசிதமான காரியம்; மிக இலகுவானதும் சரளமானதுமான நடையிலே, நடப்பதைக் வாசிக்கின்றவர் கண்முன்தோற்ற, உயிர்ப்பூட்டத்துடனே விளக்கமாகச் சொல்லுவார்கள்.

இந்த நகர்வீதிகளிலே, நேற்று கண்டது இன்று மிஞ்சாது, இன்று கொண்டது நாளை தங்காது. அதனால், வார இறுதிநாட்களின் பிரெஞ்சுச்சதுக்கம் இவர்களுக்கு அலுப்பதில்லை. ஒரே மேடையிலே வேறுவேறு ஓரங்கநாடகங்கள் விளிம்பிலே தமக்குட் தொட்டு நடத்திக்கொண்டிருப்பதுபோல...... அருகருகே வேறுவேறு பாத்திரப்பண்புகளையும் ஊடாடும் கதைகளையும் காலிக்கொண்டிருக்கும் ஒரு தேயாச்சுரங்கம்...... ந்யூ ஓர்லியன்ஸ் பிரெஞ்சுச்சதுக்கம்.

மூவரும் பிரெஞ்சுச்சதுக்கத்தினைச் சென்றடைந்தபோது, காலை பதினொரு மணி இருக்கும். காலையிலே வீட்டிலிருந்தே இலேசாக ஆளுக்கு இரண்டு இனிப்புத்தோசைகள் என்று பால்தேனீருக்கு முன்னர் உண்டுவிட்டுப் போனதினால், பிற்பகல் இரண்டு மணி வரைக்கும் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு குறுக்காகவும் நெடுக்காகவும் ஒன்றுக்கு மேற்பட்டதடவை சிறிய சிறிய சந்துகளிலே திரும்பித்திரும்பி அலைந்தார்கள். நண்பன், தன் ஒளியப்பதிவியினாலும் படக்கருவியினாலும் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்டிருந்தபோது கட்டப்பட்ட கட்டிடங்களின் உப்பரிகைகளையும் பூந்தொட்டிகளையும் கைவினைப்பொருட்கள், ஓவியக்கடைகளின் வெளிப்பகுதிகளையும் படம் பிடித்துக்கொண்டிருந்தான். தனக்கு எப்போது கல்யாணம் ஆகக்கூடும் என்று 'பலபளவண்ணம்' கூரைத்தலைப்பாகை கட்டிய 'உவூடு' பெண்மந்திரவாதிடம் நான்கு டொலர் கொடுத்து கேட்ட போது நண்பனுக்குக் கிடைத்த ஆரூடமும், அவனது மூல நட்சத்திரத்தினையும் பெற்றார் பிறப்பையும் ஆதிமூலங்களாக வைத்து அவனின் தாயாருக்கு இலங்கையிலே சொல்லப்பட்ட காண்டக்கூற்றும் முற்றிலும் ஒன்றையொன்று நிராகரித்ததிலே நண்பனுக்கு மிகுந்த மனவருத்தம்; அதைத் தேற்ற, ஒரு பதிவோவியரிடம் இருபத்தைந்து டொலர் கொடுத்து, தன்னைப் பத்து நிமிடத்திலே பதித்துக்கொண்டான். அவர் ந்யூ ஓர்லியன்ஸின் ஜாஸ் இசைஞரோடு சேர்த்து வரையப்பட்ட நீலநாய் ஓவியத்தை மிகவும் சிலாகித்துக்கொண்டு வரைந்து கொடுத்த ஓவியத்திலே, தம் மீசை சிவப்பாகவும் தலைமுடி மஞ்சளாகவும் பண்பின் அடிப்படையிலே தீட்டப்பட்டு, திட்டுத்திட்டாக நிறங்கள் தேங்கிக் குழம்பி இருந்ததிலே அத்துணை மகிழ்ச்சி நண்பனுக்கு இல்லைத்தான்; என்றாலும், காசையும் திருப்திக்காக மேலும் சில ஒற்றை டொலர்த்தாள்களையும் வைத்து விட்டு ஓவியத்தைப் பார்த்துப்பார்த்து திட்டித்திட்டி நடந்தவனைக் கண்டு இவன் மனைவியிடம் கண்ணடித்துச் சிரித்தான்; அவள் 'வாயை மூடிகொண்டு பேசாமல் நடவுங்கள்' என்பதுபோலக் கண்ணால் முறைந்து, வலக்கைச்சுட்டுவிரலாலும் தன் உதடுகளுக்குக் குறுக்கே அழுத்திக்காட்டினாள்.

இந்த நிலையிலேதான் ஜக்ஸன் சந்துக்கும் இருநூற்றாண்டுகாலத் தேவாலயத்துக்கும் அந்தப்புறம் டெகாடூர் வீதியிலே அந்த இரண்டு தட்டொலி ஆட்டக்காரப் பையன்களை இவர்கள் காண நேர்ந்தது. இவனும் இவன் மனைவியும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நகருக்கு வந்தபோது, இப்படியான ஆட்டங்களைக் கொஞ்ச நேரம் நின்று பார்த்து, கூட்டத்தோடு கூட்டமாகச் சில்லறையை விசிறிவிட்டுப்போவார்கள். இப்போது நின்றுபார்க்கும் அளவுக்கு ஈடுபாடு இல்லை; ஊரிலே ஊனமுள்ள பிச்சைக்காரர்கள், சில்லறை கிடக்கும் தகரப்பேணியை இலயத்துடன் குலுக்கும் ஒலியினை ஒப்பிய ஓசையை மட்டும் கேட்டுக் கொண்டு, சுற்றி -கற்பனை நீள்வளையப்பரிதியொன்றின் மூன்றிலிருபகுதியிலே- நின்று பார்க்கும், சிறியதும் பெரியதுமான சுற்றுலாப்பயணிகளின் காலிடைகட்குள்ளாலும் தோற்பட்டைகட்கு மேலாலும் தெரியும் ஆட்டத்துணுக்குகளையும் நுணுக்குகளையும் நடையோடு நடையாகப் பொறுக்கிக்கொண்டு பிரெஞ்சுச்சந்தைக்குப் போகின்ற அளவிலேதான் அவர்களின் மனநிலை. இரும்புசல்பேற்றினாலான நகைகளின் புதிய மாதிரியுருக்களும் கொரிய, தூரிகைஎழுத்தோவிய நளினமும் 'நீண்ட கழுத்து-தொங்குகாது' ஆபிரிக்க மரப்பெண்சிற்பங்களும், இந்தக்காற்குதி பாதம் தட்டாட்டத்திலும்விட ஈர்ப்பு நிறைந்தவையாகத் தெரிந்தன.

ஆனால், வந்திருக்கும் நண்பனுக்கு இன்றைக்கு ஒருமுறை அப்படியான ஆட்டமொன்றைப் பார்த்துத்தான் ஆகவேண்டும் என்ற விழைவு. இரண்டு கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சம் தள்ளித்தள்ளி, ஒன்றோடு ஒன்று கலக்காமலும் கலந்ததும்போலக் கிடந்தன. அவற்றிலே -தேனீரிலே கரண்டியாற் கொட்டிய சீனி கரைவதுபோல- வெளியிருந்து உள்ளே நுழைந்து ஒருவாறு முன் வளையவரிசையிலே வந்து சேர்ந்தார்கள்.

இரு கறுப்பினச் சிறுவர்கள், ஆளுக்காள், கொஞ்சம் கொஞ்சம் தொலைவிலிருந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்; ஒருவன் ஏறக்குறைய பதினைந்து பதினாறு வயது விடலைப்பருவத்தோன்; மற்றையது, ஆறேழு வயதுப் பாலகன். பாலகனின் முன்னால், ஓர் நீண்ட கறுப்புக்கைக்குட்டை (அது, தலையிலே நாகரீகம் என்று அந்ரே அகாஸி கட்டிக்கொள்வது போன்ற 'பந்தனா' வகைப்பட்ட துணி என்று அவள் சொன்னாள்); மற்றவன் முன்னாலே கிடந்தது, மெக்ஸிக்கன் பாட்டுக்குழுக்கள் பயன்படுத்தும்வகையான தொப்பியாக இருக்கலாம் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

பாதத்தையும் குதியையும் நிலத்திலே தட்டித்தட்டி ஆடும் ஆட்டத்தை முகமெல்லாம் கறுப்புப்பூசிய வெள்ளை அல் ஜோன்ஸனின் படத்திலும் பிரெட் அஸெயர் படங்களிலும் பார்த்துவிட்டுவந்து இங்கே அதை எதிர்பார்த்து வருகின்ற சுற்றுலாப்பயணிகள் திருப்தியோடு திரும்பிப்போகின்றார்களா என்பது என்னைப் போலவே அவனுக்கும் தெரியாது. சில சந்தர்ப்பங்களிலே, அவனது சில நண்பர்கள் இந்த வகை நடனத்தில் உள்ள குதி, பெருவிரல் அசைவுகள், கால் மாற்றி ஆடுதல், நிலம் தட்டுகையின் மீடிறன், சுழிப்பு, தூரிகை, துள்ளல், முறிப்பு, பாதமூட்டு சுழல்வு என்பனவற்றினைப் பற்றியும் அவற்றின் இணைப்பு பற்றியும் அவனுக்கு விளக்கிச் சொல்லமுயன்றதுண்டு. ஆனாலும், அவனுக்கு அவை ஏறவில்லை. ஆக, அவனுக்கு, இயல்பினிலே உள்ள அழகுணர்வு மட்டுமே ஆட்டக்காரனது கற்பனை வெளிப்பாட்டிலும் நளினத்தினதும் கண்ணைப் பதியவைத்து இது தனக்குப் பிடித்திருக்கின்றது/பிடிக்கவில்லை என்று சொல்ல வைத்திருக்கின்றது; அதற்குமேலே, எந்த ஒரு கலையையும் பற்றி தீர்மானமாக நல்லது கெட்டது சொல்ல அதைப் பற்றிய சொந்தப்பயிற்சி கொஞ்சம் அவசியம் என்று அவனுக்குத் தோன்றும். அவன் மனைவியின் கருத்து என்னவென்று அவள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. பிடித்திருந்தால், அவளின் முகத்திலே ஒரு வெளிச்சம் மினுக்கும்; இல்லாவிட்டால், "நகர்வோமா?" என்ற கேள்வி தொக்கும்.

பயிற்சியின் காரணமோ அல்லது இயற்கையிலேயே இருக்கும் திறமையின் காரணமோ, விடலைப்பையனின் ஆட்டத்துடன் மூவரும் மிகவும் ஒன்றிப் போகக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, அவன் நிதானமாக இட்ட ஒரு முழுத்தட்டுக்குப் பின்னால், விரைந்து ஒரு சீரான தொடராக குதிப்பும் பெருவிரலின் நில அரைத்தட்டும் என்று விழுந்த கணங்கள், இவையும் நண்பனையுமே தத்தம் கால்களைத் தட்ட வைத்ததுடன் ஓரிருமுறை விரல்களைக் கொண்டு உந்தவும் செய்யத்தள்ளியது. இவனின் மனைவி இதைப் பார்த்து சிரித்துக்கொண்டாள். அவள் மட்டுமல்ல, இப்படி செய்யும் எந்த நாற்பத்தைந்து வயது மனிதனின் மனைவியும் சிரிக்கத்தான் செய்வாள். அந்தக்காய்ப்பருவப்பையனுடைய சப்பாத்துக்களும் சிறியவனின் சப்பாத்துக்களைப் போலவே, சத்தம் எழுப்புவதற்கு அடிப்படையான அடிலாடங்களைக் கொண்டிருக்கவில்லை; அதற்குப் பதிலாக, இருவருமே குளிர்பான, மதுப்போத்தலின் மூடிகளை ஏதோ விதத்திலே தத்தம் தேவைக்கேற்ற வகையிலே உருமாற்றிப் பொருத்திக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனால், அவற்றிலேதும் கழன்றுவிடும் சமயங்களிலே நின்று நிதானமாகச் செருகியிருந்த இடத்திலே பொருத்தி, மீள ஆடவேண்டி இருந்தது. அது நடனத்திலே அடிக்கடி தொய்வினை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்த நடனம் நளினத்துடன் இவர்களுள்ளே ஓர் உற்சாகத்தை மூன்று மணிநேர நடைச்சோர்வுடன்கூடிய மனநிலைக்குத் தந்தது என்பதிலே ஐயமில்லை. ஆனால், இவன் நண்பனுக்கும் மனைவிக்கும் வெறுப்பைத் தந்தது என்னவென்றால், அந்த இரண்டும் கெட்டான் வயது ஆட்டக்காரனின் பொறுமையின்மையும் பணவேட்கையுமே.

அந்த ஆட்டக்காரன் தொப்பிக்குள்ளே கணிசமான அளவு சில்லறையும் ஒற்றை ஐந்து டொலர் நோட்டுக்களும் இருந்தாலும்கூட, கொஞ்சம் தள்ளி ஆடிக்கொண்டிருந்த சிறுவனின் கைக்குட்டையிலே இவனின் வருவாயோடு ஒப்பிட்டு நோக்குகையிலே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது எனலாம். இது விடலைக்குப் பொறுக்கவில்லை; எல்லோரும் தன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, பணத்தை மட்டும் சிறுவனுக்குப் போட்டு விட்டுப் போகின்றார்கள் என்றும் அது நியாயமில்லை என்றும் இடைக்கிடையே ஆட்டத்திற்கு இடையிலே நின்று நின்று கத்திக்கொண்டிருந்தான்; சில வேளைகளிலே சிறுவனின் கைக்குட்டையிலே யாராவது பணம் போட்டுவிட்டுச் சென்றால், அப்படிப்போட்டவர் தன்னுடைய நடனத்தினையே பார்த்துக் கொண்டிருந்தவர் என்றும், ஆனால் பணத்தை மட்டும் சிறுவனுக்குப் போட்டுவிட்டுப்போகின்றார் என்றும் குறைகூறிக் கொண்டு, சிறுவனின் கைக்குட்டையிலிருந்து அந்த டொலர்க்காகிதத்தை எடுக்கவும் முயன்றான்; அப்படியான கணங்களிலே சிறுவன் தன்னுடைய ஆடமுயலும் செய்கையை நிறுத்திவிட்டு, தன் கைக்குட்டைக்குமுன்னால் குனிந்து போராடவோ அழவோ முயற்சித்துக்கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள், பெரியவனை ஏசினார்கள்; அல்லது, சிறியவனுக்கு மேலும் சில சில்லறையை வீசினார்கள். பெரியவனின் உள்ளத்தின் ஆத்திரம், அவனது ஆட்டத்தின் துடியிலே தெரிந்தது. இன்னமும் அவனை யாராவது இவ்வாறு சூடேற்றினால் நல்லது என்று இவன் எண்ணிக்கொண்டான்.

விடலை சொல்கின்றதிலும் ஓரளவு நியாயம் இருக்காமல் இல்லை; சிறுவன் ஆடினான் என்பதிலும்விட ஆடமுயற்சித்தான் என்கின்றதே சரியாக இருந்தது; ஓரிரு சந்தர்ப்பங்களிலே விழவும் செய்தான். மக்கள், "ச்தோ! பரிதாபம்" என்றார்கள்; பணத்தைப் போட்டார்கள்; பிறகு, சிறுவனின் பரிதாபத்தைப் பார்க்கமுடியாமல் முகத்தைத் திருப்பி, பெரியவனின் நளினத்திலும் குதிப்பிலும் ஒன்றினார்கள்; பேசாமல் திரும்பிப்போனார்கள். அவள் மட்டும் சிறுவனை உற்று உற்றுப் பார்த்து கண்ணைக் கலக்கினாள்... தனக்கொரு குழந்தை இருந்தால், அவனும் இப்படித்தான் நடனமாடலாம் என்று ஒரு நாற்பது வயதுக்காரி கலங்குவது சாதாரணவிடயம்தான். கடைசியிலே இரு ஆட்டக்காரர்களும் சோர்ந்துபோய், அவரவர்க்குச் சேர்ந்ததை எண்ணிக்கொண்டிருந்தபோது, இவன் காசைப் பெரியவனுக்கே போட்டான்; நண்பன், சிறுவனுக்குப் போட்டான்....அஃது இவனது மனைவிக்குச் சரியென்று பட்டது; இவனுக்கும் விடலைக்கும் முற்றாகப் பிடிக்கவில்லை. ஆட்டம் நின்றதால், பசி தெரிந்தது. திரும்பி நடந்தனர்; இவனின் நண்பன் கொடுத்த பணத்திற்கு சிறுவனும் பெரியவனும் அடிபிடி செய்து கொண்டு இருப்பது, பின்னாலே கேட்டது; சிறியபையன், இவன் நண்பனைத் தனக்காக பெரியவனிடம் பேசும்படி அழைத்ததும் கேட்டது; இவன் மனைவியும் நண்பனும் இடைத்தரகம் செய்யத் திரும்பிப் போனார்கள்; இவனுக்கு ஆத்திரமாக வந்தது. காலை நிலத்திலே ஓங்கிக் உதைத்தான்; வலித்தது; மனைவி திரும்ப வந்தபோது, பிரச்சனையைத் தீர்க்க, பெரியவனுக்கு அவள் திரும்ப ஒரு டொலர் கொடுக்கவேண்டியதாயிற்று என்றாள்; இப்போது, உதைக்காமலே வலித்தது.

இவனுக்கு பேர்பன் வீதியிலே ஒரு குறிப்பிட்ட கடை, நீயூ ஓர்லியன்ஸ் உணவுக்குப் பிரபல்யமானது என்பது தெரியும்; பொதுவாக, நண்பர்கள் வந்தால், பிரெஞ்சுச்சத்துக்கத்தைச் சுற்றிமுடித்தவுடன் அந்தக்கடைக்கே உணவுக்கு அழைத்துப்போய் அன்றையச் சுற்றுலாவை முடிப்பது வழக்கம். திரும்பி வரும்போது, இவன் நண்பனிடம் சிறிய பையனுக்குப் பணத்தினைக் கொடுத்திருக்ககூடாது என்றான். நண்பன் கொஞ்சம் கடுமையாக 'ஏன்?' என்று எடுத்தெறிந்து கேட்டான். "நீ ஒருபோதும் சிறியபையனின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை; முழுக்கமுழுக்க பெரியவனின் உழைப்பிலே விளைந்த அழகான நடனங்களைப் பார்த்துவிட்டு எப்படி நீ ஒரு கேவலமானவன்போல சிறியவனுக்குப் பணத்தை விட்டெறிந்துவிட்டு வரலாம்?" - இவன் ஆத்திரமாகவே சொன்னான்; "பெரியவனுக்கு நீ கொடுத்தாய்தானே? மற்றவனுக்கு நான் கொடுத்தால் ஆகிற்று; அது நியாயம்தான்" என்று அவனும் சூடானான். இந்தத் தர்க்கம் நியாயமாக இவனுக்குப் படவில்லை; "நான் உனக்காகப் பார்க்கவில்லை; எனக்காகப் பார்த்தேன்; அதற்காக நான் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுத்தேன்; நீ பார்த்ததற்கும் சேர்த்துத்தான் நான் கொடுத்தேன் என்று நீ நினைப்பது எந்த வகை நியாயப்படுத்தல்?" - எகிறியபோது, ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவன், "இப்படி நியாயம் அநியாயம் என்று வகைபடுத்தினால், சிறுபையன் இந்த வயதிலே ஆடுகின்றான்; எத்தனை தடவை விழுந்தான் என்று பார்த்தாயா? எங்களின் இந்த வயதிலே நாங்கள் எங்களை வாழவைக்க நாங்களே உழைக்கவேண்டிய அவல நிலையிலே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவனின் நிலையையும் இயற்கை எங்களை அந்த அளவிலே கொடுத்துவைத்தவர்களாக வைத்திருப்பதையும் எண்ணும் எவனுக்கும், காசைக் கொடுக்காமல் வரமுடியுமா?" அழுத்தமாகக் கூறினான்; இவன் மனைவியும் அதை முழுதாக ஆமோதித்தாள்; அவளுக்கு எந்தக்குழந்தை ஆடினாலும் எந்த வயோதிபர் அழுதாலும் இதே பதிலைத்தான் சொல்ல வரும்.

இவன் நமுட்டுச்சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு, செயின்ஸ் லூயிஸ் வீதி-பேர்பன் வீதி முடக்கிலே திரும்பும் போது வினாவினான்; "அதாவது, சிறுபிள்ளைகள் வேலை செய்கின்றதை நீ ஆதரிக்கின்றாய்; ஊக்குவிக்கின்றாய்; நீ அதைத்தான் சொல்லவருகின்றாய் என்று உன் கருத்தினை நான் அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா?" நண்பன், கொஞ்சம் அரசியல் இடதுபக்கச்சாய்வுள்ளவன்; அண்மையிலே சியாட்டிலிலே நடந்த உலக வர்த்தகம் சம்பந்தப்பட்ட மகாநாட்டினைப் பற்றி மிகவும் கடுமையான மின் அஞ்சல்களை -அதனுடன் சம்பந்தப்படாத, அது என்ன விடயமென்றே தெரியாத- நண்பர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றான் என்பது பொதுநண்பர்கள் வட்டாரத்திலே உள்ளகுறை. சிறுவருழைப்பு என்பதற்கு கொஞ்சம் எதிரானவன். பாக்கிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளிலே ஆலைகள் வைத்திருக்கும் நைக்கி போன்ற பன்னாட்டுத்தொழில்நிறுவனங்களின்மீது தீராத கோபம் அவனுக்கு உண்டு என்று இவனுக்குத் தெரியும்.

நண்பன் கொஞ்சம் கலங்கித்தான் போய்விட்டான். பின் சிறிதுநேர யோசனைப்பிறகு, உணவுக்கடையினுள்ளே மாடிப்படியிலே ஏறும்போது மெதுவாகக் கேட்டான்; "சரி, நான் போட்டது தவறுதான்; ஆனால், இரண்டு விடயங்களை யோசித்துப்பார்; சிறியவன் சந்திமுனைகளிலே நின்று, சதம், காற்பணம் தா என்று பிச்சை கேட்காமல், கொஞ்சம் தானே உழைத்துச் சம்பாதிக்க முயல்கின்றான். எங்கள் நாட்டிலே உள்ளதுபோல, இங்கு அவனை எந்தத் தொழில்நிறுவனமும் அவன் இயலாமையை எண்ணி வஞ்சிக்கவில்லை.... அவனின் பெற்றோரின் வஞ்சிப்பு ஏதோ விதத்திலே இருக்கின்றது என்றால்கூட... அந்த உழைக்க முயலும் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்த வேண்டாமா? பதினாறு வயதுக்காரன் வீதியிலே இதையே வருங்காலத்திலே தொழிலாகக் கொண்டு தன்னைக் குறுக்கக்கூடாது என்று நீ அவனின் உற்சாகத்தை வடிக்க வேண்டும்" என்றான்; இவன் மனைவி வேறு போதாக்குறைக்கு, "அந்த சிறுவனுக்குக் காசைக் கொடுக்காது அத பெரிய பையனிடம் பயந்து பயந்து கெஞ்சி நிற்க வைத்து வந்துவிட்டு, இங்கே நாங்கள் நிம்மதியாகச் சாப்பிடமுடியுமா?" என்று தன் பங்குக்கு ஒரு வாதத்தைப் போட்டாள்.

பரிசாரகன் வந்து பட்டியலைக் கொடுத்துவிட்டு உண்ண வேண்டியதைத் தேர்வு செய்யும்படி சொல்லிவிட்டுப் போனான்; அவலைத் தெரிவுசெய்யச் சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் தொடர்ந்து வாக்குவாதப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்.

இவன், "அப்படியானால், பெரியவனின் நடனத்தைப் பார்ப்பதற்காக நாம் அங்கே தரித்திருக்கக்கூடாது" என்று இன்னொரு கோணத்திலே தொடங்கினான். நண்பன், "கலையும் பரிதாபமும் வேறு வேறு என்றும் இரண்டுக்குமே நாங்கள் அவையவைக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும்" என்ற நிலையிலே வாதாடினான். சாப்பிட்டு முடிந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, நடந்து வீட்டுக்குப் போக 'டிராம்' வண்டி எடுக்கும் இடம் வரைக்கும் நடந்தபோதும் மூவரும் இதையே பற்றி வாதாடினார்கள்..... இவன், பெரிய பையனின் உழைப்பினை மதிக்க வேண்டுமென்றும் அவனின் உழைப்பு, அருகே நின்று கொண்டிருந்ததாலும் வயது எழுப்பிய பரிதாபம் காரணமாகவும் சிறுவனுக்குப் போகக்கூடாதென்றும் சொந்த மொழியிலே அடித்துச் சொன்னான்; பல வேளைகளிலே அருகாமையிலே வீதியிலே சென்றவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தார்கள்; இவனது மனைவியும் நண்பனுமோ, சிறிய பையனின் வயதின் பரிதாபமும் சொந்தக்காலிலே நிற்கவேண்டுமென்ற உணர்வும் கணக்கிலெடுக்கப்படவேண்டுமென்றும் பெரியவனின் இந்தத்தொழில் மீதான ஈடுபாடு அவனின் எதிர்க்காலம் கருதிக் குறைக்கப்படவேண்டுமென்றும் வாதாடினார்கள்; அவர்கள் பேசியபோதும், வீதியிலே தனி ஆவர்த்தனம் வாசித்துகொண்டிருந்த சக்ஸபோன் வாத்தியக்காரர், கிற்றார் வாத்தியக்காரர், புல்லாங்குழல் வாசிக்கிறவர், ஏதாவது கடை பியருக்கு விளம்பரம் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தத்தம் இலயிப்பினைக் கொஞ்சம் நேரம் மறந்துவிட்டு மூவரையும் உற்றுப்பார்த்தார்கள்.

கனால் வீதி வந்தபோது, 'டிராம்' வண்டியிலே ஏறமுன்னர், சிறுநீர் கழித்துவிட்டுப் போவது உசிதமான காரியமாக இவனுக்குப் பட்டது. பக்கத்திலே இருந்த 'மக்டொனால்ட்ஸ்' உணவுச்சாலை வீதியோரமாக பூந்தொட்டிகளுக்கு அருகாமையிலே மேசையொன்றிலே மற்ற இருவரையும் இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சிறுநீர் கழிக்கப்போனான். போகும்போதும் இவன் பெரிய பையனுக்கு ஆதரவாக ஏதோ சொல்லிக்கொண்டுபோக, நண்பன் மாற்றுநிலைப்பாட்டிலிருந்து ஏதோ பதில் கொடுத்தான். சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போதும் கைகளைக் கழுவிவிட்டு வரும்போதும் நண்பன் சொன்னதற்குப் பதிலடியைத் தனக்குள்ளே தீவிரமாகத் தயாரித்துக்கொண்டிருந்தவன், வந்து உட்காரும்போதே, தன் பதிலைச் சொல்லத்தொடங்கினான்.

"சத்தம்போடாதே" என்ற ரீதியிலே சைகைகாட்டிய நண்பனையும் இவன் மனைவியையும் பார்த்து விழித்த இவனுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த மேசையினை நண்பன் சுட்டிக்காட்டினான்.

திரும்பிப் பார்த்தபோது, தட்டொலிநடனமாடிய சிறுவனும் பெரியவனும் ஆளாளுக்குச் சேர்ந்த தொகையை, அந்த மேசையிலே மொத்தமாகக் குவித்து எண்ணிக்கொண்டு, 'அப்பிள் பை'யும் 'ஸ்ரோபரி சண்டி'யும் குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

'00 ஏப்ரில், 13 வியாழன் 19:05 மநிநே.

No comments: