Tuesday, September 13, 2005

குவியம் - 14


படம் பார் பாடம் படி




நாட்டிலே இன்றைக்கு மிக முக்கியமான விடயம் எத்தனையாவது பதிவு நாம் போடுகிறோமென்பதுதான் என்பது எனக்குத் தெரியவந்தபோது, நான் எத்தனை பதிவுகளைப் போட்டேன் என்று கணக்கெடுக்க விருப்பம் வந்தது; அனால், இலுப்பைக்கொட்டை, புளியங்கொட்டை, முருக்கங்கொட்டை எண்ணுவதுபோல, பதிவுகளை எண்ணுவது சுகமான வேலையில்லை; பஞ்சிபிடிச்ச வேலை.

ஆனால், தொள்ளாயிரத்து முப்பத்தியேழாவது நாள், இருபத்தொரு மணி நாற்பத்தி மூன்று நிமிடம் இருபத்தி மூன்றாவது செக்கனிலே போட்ட ஏழாயிரத்து நாற்பத்து மூன்றே கால்_பதிவினைப் பற்றி எவருமே கேட்காதலாலே, மிருகங்கள் தமது ஏரியாவிலே ஒண்டுக்கடித்துத் தம் இறைமையினையும் சுதந்திரத்தினையும் உரித்தினையும் நிலைநாட்டுவதுபோல நானே போட்டு வைக்க வேண்டியதாகிப் போனது. இல்லாவிட்டால், அதிப்ரமாண்டமான ஈஸ்ட்மென் கலர் வண்ணப்பதிவின் வரலாற்றின் ஏடுகளைக் குறிப்புக்காகவும் சலவாத்துக்காகவும் (இது வேற சலத்திலே நீந்தும் வாத்து) புரட்டப்போகும் ஆர் ஆட்சியாள 70 மிமீ ராஜராஜசோழர்கள் சோழர்கள் நம்பியாண்டார் நம்பிகள் நம்பியார்கள் என்னை மறந்து பதிவு வரலாற்றினைப் புதுக்கிவிடுவார்கள். பிறகு, என் வாரிசுகள் மனம் நொந்துபோகாதா? இருக்கிற காலத்திலேதான் உருப்படாமற்போன நாசமறுவான், செத்துங்கூட ஒரு கோதாரியும் எம் பெயர் சொல்ல ஏதும் பண்ணாமல் போய்விட்டானே எனத் திட்டுவார்களென ''Deep throat' Mark Felt மாதிரி நான் felt பண்ணியதாலே, இரண்டாம் பதிவினைப் போடவேண்டியதாயிற்று. "முதற்பதிவைத்தானே போடுவது முறை; ஏன் இரண்டாம் பதிவு?" என்று யாராவது அறிஞர் பெருந்தகை கேட்கக்கூடுமென்பதாலேதான், இரண்டாம்பதிவினைப் போட்டிருக்கின்றோம். வரலாற்றாசிரியர்கள் சந்தேகத்தோடு கேள்வி கேட்க இடம் கொடுக்காத எப்பேர்ப்பட்ட ராஜராஜகம்பீர கொசுகடித்தான் அந்ரஸாகேப்பும் அய்யோன்னு சரித்திரத்திலே சாமான்யமானப் போவான் என்பதால், இப்படியாக கேள்விகளுக்கான இடைவெளியைப் பள்ளத்தாக்காக விட்டுப்போகிறோம் என்று அறிக. அடிக்கடி "நாங்கள் இதைப் பண்ணியிருக்கிறோம் அதைப் பண்ணியிருக்கின்றோம்" என்று லேஞ்சியைப்போட்டு ஜன்னலோர ரெயின்சீற்றைப் பிடித்ததையும் ரெஸுமியிலே எழுதிக்கொள்ளவேண்டியது வாழுங்கலைகளிலே ஒன்றாதலால் நாமிதைச் செய்யவில்லை என்று சுட்டிச் சொல்லிக்கொள்வது ஒரு கலை. "களையிலாமற் கலையில்லை; கலையில்லாமற் களையில்லை" என்று யாராவது புலவர் அனானிமாசாகச் சொல்லியிருப்பார் என்பதைக் கவனியுங்கள்; சொல்லாவிட்டால், யாராவது புரவியாகப்போகிறவர்கள் புழுதியாகப்போகிறவர்கள் சொல்லக்கூடும். தமிழை நாமே கண்டுபிடித்தோம்; நாமே - இலக்கணத்தமிழ், இலக்கியத்தமிழ், இசைத்தமிழ், அறிவியற்றமிழ், அவித்ததமிழ், அவியாவுருளைத்தமிழ், கூழ்முட்டைத்தமிழ், குப்பத்துத்தமிழ் அனைத்துத்தமிழையும் அவியலாய்க் கண்டு பிறர் இன்புற முதலில் அளித்தவர், அழித்தவர், அழி ரப்பர் பென்சிலோடு சில்லோட்டக் கற்றுக்கொடுத்தவர் நாமே. நாமேதான்.

தமிழ்மணப்புனலோடு போகாமலிருக்க இத்தனை புலம்பவேண்டியிருக்கிறது பாருங்கள். ஐய்யய்யோ மறந்துவிட்டேன். புனற்றமிழ், புனைத்தமிழ், பூனைத்தமிழ், பூனாத்தமிழ் வகைப்பட்ட பொல்லாத்தமிழ்களையும் புனைந்து தந்தவர் நாமே; யாமே; பண்டைமாந்தர் யாங்கு ஈடேற பண்போடு பண்டமிழ் வழங்கிப் பண்டம் பெறாமலே போன பயிற்றங்காய்த்தமிழர் யாமென்று சொல்லிப் புக்கும் வாருங்காலவராலாறு.




No comments: