Wednesday, October 25, 2006

கணம் - 486




ஆற்றைக் கடப்பாருக்காய் அப்பத்துடன் காத்திருப்பேன்
- அன்றலர்ந்த அரைத்துண்டு அப்பம்
உடன் தேங்கு துளி பருகுநீரும் வரளும் வெயில்.

அக்கரையிருந்து அவர் வருவார்; ஆறு பிரிய
அலை ஒழுக, மச்சம் மருண்டு வழி விழி அலைய,
வண்டல் விரல் வேர் விழுத்தி வருவார் தலை
ஒளிய ஒளி காலும் முகபாவம்,
முதிர்ந்திழிந்து கணம் குழவி முறுவல் படர்ந்தொழிந்து
களை பெருகிக் களைத்திளைத்து அழிய எழில் துளிர்போடும்.

அவர் வருவார்; முகம் சோர்ந்து கை நீண்டு
தொங்குமெனைக் காண்பார்; அப்பம் கேட்பார்.
வேர்வைக்கை பொத்தி வைத்த துண்டு வைப்பேன் பாதம்.
தொட்டெடுப்பார். தட்டுத்தட்டாய்ப் பெருகும் ரொட்டி.
ஒன்றுண்பார்; மீதி உன்னதென்பார்;
தாகத்துக்கொரு துளி தாவென்பார்; நானளிக்க
நனைத்து நா தடவ நீர் ஊறும் கலயம்.

வழி பார்த்து மேல் நடப்பார்; வாழ்த்தியிருப்பேன்,
"வழங்கினை வாழி நீ! வளர்த்தனை வாழி நீ!!"

என்னிடத்தை எப்போது எவரெடுத்து ஒப்பென
உம்மிடத்தே தந்தாரென்றெண்ணியெண்ணி
மாய்வேன்; எதுவுங் காணாராய் எட்டிப் போவார்
துல்லியமாய்த் தொட்டு வைத்த பொட்டாய்
தொலைதூர முற்று வைப்பார்.

எனதான
அரைத்துண்டு அப்பமும் சொட்டு அத்துளி நீரும்
மட்டுமே இப்போதும்
சப்ப ஒட்டும் நான்.

'06 அக்., 25 புதன் 16:30 கிநிநே.



-/சித்தார்த்த 'சே' குவேரா.

6 comments:

இளங்கோ-டிசே said...

சித்தார்த்த 'சே' குவேராவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி :-).

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கவிதையைத் திரும்ப படிக்க வேண்டும்!


சித்தார்த்த 'சே' குவேரா திரும்பவும் எழுதுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது!!!

-மதி

தமிழ்நதி said...

சே அவர்களுக்கு,

கவிதை நன்றாக இருக்கிறது. ஏனையோரின் படைப்புகளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது. முகங்களைக்கூட ஒன்றிற்கொன்று வேறுபட்டிருப்பதால்தானே விரும்புகிறோம் இல்லையா…

Jayaprakash Sampath said...

டிஜிடல் காமிராவை தொலைச்சு தலைமுழுகிட்டீங்கன்னு தெரிஞ்சா இன்னும் சந்தோஷம் :-)

SnackDragon said...

கவிதை பல சமயங்களில்/ளுக்கு பொருந்துவதாக உள்ளது.
நீங்கள் சொல்லும் படி பார்த்தால், அதைத்தான் "சுயம்" என்பதா? ;)

நன்றி

-/பெயரிலி. said...

நண்பர்களே நன்றி பல.
படப்பெட்டி பதிவினைத் தொடர்ந்து "உள்ளேன் ஐயா! உள்ளேன் அம்மா" பாட்டிலே தள்ளும் பாதுகாப்புக்குத்தான். தூக்கி எறியச் சொல்லி உள்ளூரிலேயே தொடர் தொந்தரவு ;-))