Monday, January 05, 2015

பால(ச்)சந்தரும் எதேச்சையாய் அவருக்குப் பட்ட எறிபந்தும்



பால(ச்)சந்தரும் எதேச்சையாய் அவருக்குப் பட்ட எறிபந்தும்

1.   எறிபந்து
இறந்தவருக்கு உடற்சூடு ஆறமுன் புகழ்ச்சன்னதமோ சன்னக்கடாசலோ செய்வதிலே இரு காரணங்களாலே எப்போதும் ஒப்பிருந்ததில்லை; ஒன்று,  மேலோங்கிய அதீத உணர்வுகளின் குதம்பலாகமட்டுமே சொல்லவருவது முடிந்துபோகுமென்ற எண்ணம்; இரண்டாவது, இறந்தவர் இரண்டாம்நிலையாகி, “நான்”, “நான்” என்பதே முன்னிலையாகிப் போய்விடும் அவலம். ஆக, வேண்டின், சுருக்கமாக, தனியாளாகப் பாதித்ததைக் கூறிவிட்டு இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு நகர்வதே விழைவு.

பால(ச்)சந்தரின் மறைவினையிட்டும் இதே “சுடச்சுட வேண்டாமே!” நோக்கியிருந்தாலுங்கூட, இத்துணை இத்தனை பட்டபின்னும், (களம் வாழும் | புலம்பெயர்ந்த) இலங்கைத்தமிழரிடையே காணப்படும் அதீதப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டின் கலை | இலக்கியம் | பண்பாடு சார்ந்த “எலும்புத்துண்டுக்கு ஏங்கி எசமானின் மூஞ்சியை அங்கீகாரத்துக்குப் பார்த்துக் கண்ணால் இறைஞ்சும்” தன்மையும் விமர்சனமற்ற உள்வாங்கலும் ஏற்படுத்திய (வெஞ்)சினம் முடுக்கிய கணமொன்றை உணர்ந்ததாலேதான் எழுத நேர்ந்தது. இங்குங்கூட, பாலச்சந்தரின் படைப்புகள் பற்றிய விமர்சனத்தினை விரிவாகவோ தெளிவாகவோ ஆழமாகவோ அகலமாகவோ க்ரோத் ஹோமோன் ஏற்றியோ டீ ஹைட்ரேட் பண்ணியோ நான் எழுதவில்லை. பாலச்சந்தரினைப் பற்றி எழுதிய பின்னாலே,  கடைசியாக அவரின் இழப்பினைக் குறித்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் பெரும்பான்மை இலங்கைத்தமிழ்பேசுவோரின் அகவுலகு பற்றிய எழுதிய பந்தியே என் முதன்மைநோக்கு.

இச்சொட்டின சிறுநீர்த்துளித்தீவு பாக்குநீரணைக்கு அப்பாலே எல்லாவற்றையும் வியந்துபார்க்கும் அவச்சூழ்நிலையை இன்றுதான் நான் முதலாகக் குறிப்பிட்டேன் எனச் சொல்லமுடியாது. தொடர்ச்சியாகவே  சொந்தவீட்டிலிருந்தும் அயல்வீட்டிலிருந்தும் எவ்வியக்கத்துக்கேனும் போய் “இலட்சியப்படாத/ இறக்காத/ யாராலோ எதுக்காகவோ எதுக்கென்று இல்லாமலோ கொல்லப்படாத தாடி இளைஞனையா/ இளையாளையா” பாலச்சந்தரின் அழுகின அப்பிட்பழத்துக்கு அழும் அதீத கவிஞராகிக் கமலஹாசன் உள்ளம் நெகிழத் தொட்டுக்காட்டிவிட்டார்? ஆங்கு அப்பிள் கடிக்கும் சிப்பியிலே முத்துக்கலைநயத்துக்குக் கண்ணீர் குளோசப்பிலோ லோங்ஸொட்டிலோ சொட்டு சொட்டு சொட்டுதுபாரெனச் சொட்டி உருகிக்கொண்டிருக்கின்றோம். இருபத்தைந்து மைல்களுக்கு அப்பாலே என்ன நடக்கின்றதென்றே தார்மீகக்கவலையின்றி, அதிலேகூட கதை வசதிக்கேற்ப, “சிங்களத்துச்சின்னக்குயில்” இனைத் தேடிப் போட்டதோடு மட்டுமன்றி, ஏதிலிகளாக வந்து ஒதுங்கினோரை வன்முறைக்கான இளைஞர்களாகவும் அவர்களின் அகவை முதிர்ந்த ஏதிலிப்பாத்திரமான “சிலோன்” விஜயேந்திரன், சிங்களத்துச்சின்னக்குயிலின் சிங்களமக்களும் பார்த்து மகிழ்ந்த “குரு” நாயகனிடம் கையேந்தி உயிர்ப்பிச்சைக்கு இறைஞ்சும் குறியீடாகவும் ஆக்கிய பாலச்சந்தரை இயக்குநர் சிகரம் என்று எப்படியாக முறையான விமர்சனமின்றி வைத்துக்கொள்ள இந்த விஜய்க்கு “ஹப்பி பர்த்து டே” இசையமைத்துப் பாட்டாகவே வலைத்தூ!து சொல்லும் தலைமுறைக்கும் இத்தனை பட்டபின்னும் ஆகின்றது என்பதாலே வந்த பந்துதான் எனது.


பயனர்வலை சார்ந்த 1995 காலப்பகுதியிலிருந்து இன்றுவரை நான் எழுதுவதை வாசிக்கின்றவர்களும், தொடர்ச்சியாக, தனிப்பட்டளவிலே,  “தமிழ்நாட்டிலே பதிப்பதில்லை”, “குறிப்பிட்ட தமிழ்நாட்டுப்பதிப்பகங்களின் நூல்களை / சஞ்சிகைகளைப் பொருட்செலவு செய்து வாங்குவதில்லை”, “தமிழகத்திரைப்படங்களுக்காகவோ திரைப்படத்துறைகளிலிருந்து வருகின்றவர்களுக்காகவோ ஒரு சதமும் செலவு செய்வதில்லை”, “ஓசியிலே கிட்டின் பெற்றுக்கொள்வோம்; பிடுங்கிக்கொள்வோம்” என்ற நிலைப்பாட்டுக்கொத்துநீர்நிலையிலே ஒற்றைக்காற்செங்”கண்”நாரையாக நான் நிற்பதையும் அறிந்தவர்களும் உணர்வார்கள். கணித்தமிழர்கள், ‘கணினி’ என்று திருத்தி/திருந்தி எழுதுகின்றபோதிலும், இன்றும் “கணணி” என்று எழுதிக்கொண்டிருப்பதற்கும் இதே “நும்மதென்பதாலேயே நம்மேலே சுமத்தாதீர்” காரணமே (“பலர் பயன்படுத்துவதாலே பயன்படுத்தவேண்டும்” என்ற வாதத்தின் அடிப்படையிலே பார்த்தால், வாசுதேவ நாணயக்காரவின் மொழிக்’கரும’ அமைச்சு பயன்படுத்தும் நைல்நதிநாகரீககாலத்துத்தமிழ்க்குறியீடுகளையும் என்மீது நான் சூடு போட்டுக்கொள்ளவேண்டும் J ).

2000 இலே ஜெயமோகன் என்ற பேர்வழி வ. .அ. இராசரத்தினம் குறித்து எழுதுகையிலே இலங்கையிலே ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்திலே இந்திய சஞ்சிகைகள், திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டபோது நிகழ்ந்ததுக்கான காரணத்தினைச் சுழித்தபோதும் இதே நிலைப்பாட்டிலேயே கருத்தினைத் தெரிவித்திருக்கின்றேன். வலைப்பதிவுகளிலே -தமிழ்மொழியிலே இணையத்திலே முதல் எழுத்துரு, முதலிலே தமிழிலே அச்சிடப்பட்ட நூலும் காலமும், தமிழிலே முதலிலே பழைய ஏட்டுச்சுவடிகளை எடுத்து அச்சிட்டார், ஆறுமுகம்(நாவலர்).எதிர்.இராமலிங்கம்(வள்ளலார்), இலங்கை அரசினாலே அன்றைக்கே செய்யப்பட்ட தமிழ் அருஞ்சொல்லாக்கம் போன்ற- வந்த ((வி(தண்டா))வாதங்களிலும் இலங்கையின் தமிழ்சார்ந்த பங்களிப்பினை மழிக்கவோ மழுங்கவோ மறைக்கவோ செய்யாதிருக்க என்னாலியன்றளவு குரல் எழுப்பியிருக்கின்றேன்; ஆக, கருத்தினைக் குமித்தும் ஒருங்கூட்டியும் செறியச் சொல்லியிருக்கலாம் என்ற ஒரே வருத்தம்மட்டும் இன்னுமுண்டு.

எமக்கான சுயம் சார்ந்த படைப்புகளை, வாழ்/தொங்குநிலமும் நிலம் இடம் கொடுகாவிடத்துப் பெயர்ந்த புலமும் சார்ந்து நாம் கொணரப் பெரிதாய்க் கற்றோமில்லோம்; பெற்றதையுங்கூட, வளர்த்தமாட்டின் இறைச்சிக்குச் சுத்தமான மாம்ஸம் என்று முத்திரை அடுத்தநாட்டுச்சுகாதாரமேலதிகாரியிடம் குத்தக்கொடுத்துக் காத்திருக்கும் நிலையை என்னவெனச் சொல்வது? போதாக்குறைக்கு, இராணுவ, அரசியல் அழுத்தங்களாலே சுமத்தப்படும் வெளியாரின் தலையீடுகளை அவர்களின் நலன்களுக்கானவற்றை ஏற்றுக்கொள்கையிலேகூட திமிறி, தீனமாகவேனும் குரல் எழும்பும் நாம், ஒருபோதும், சத்தமின்றியே மொழி, பண்பாட்டு, சமூகவிழுமிய ஊடுருவலை நாம் அறியாமலே மயங்கி ஏற்றுக்கொள்கிறோம்.  கம்பித்தொலைக்காட்சிகளூடும் அச்சடித்த நூல்களூடும் வரவழைக்க வந்திறங்கும் -“சுதந்திரம் எடுத்துவாருங்கள்; உங்களுக்குத் தேசியகீதம் எழுதித்தருகிறேன்”; “உன் விருதை மறுத்த விருதாவிலேதான் இவ்விருதைத் தொடங்கின எனக்கே இன்னமும் தர நிற்கின்ற அடிமைகளே! நும்மிடத்தும் upstaris இறங்கிவந்து downstairs இலே ஆட்கொள்வோம்”- மேதாவிகளின் வீச்சுகளூடும் நாம் முறையான பாதையிலே கூர்ப்பாகாது, கலப்படமான உயிரணுத்திரிபோடு, தன்மொழிப்பயன்பாடு, பண்பாடு, சமூகவிழுமியங்களைப் பூதாகரமாக்கி incredible hulk ஆக முனைகின்றோம். ஒரு குறுகிய காலப்பகுதியிலே – கடந்த இருபதாண்டுகளிலே – இலங்கையின் / இலங்கையிருந்து புலம்பெயர்ந்தாரின் மொழி, சமய, பண்பாட்டு, சமூகவிழுமியக்கூறுகளிலே எத்துணை பங்கானது தமிழ்த்திரைப்படவுலகின், பதிப்புலகின், தலயாத்திரைகளின் அழுத்தத்தாலே முற்றாகவே வேறாகிப் போயிருக்கின்றதென்று ஒரு முறை நிதானித்துப் பார்த்தாலே போதுமானது. இவை தனியே இன்னொரு நெடும்பதிவாகப் பேசப்படவேண்டியவை. 

ஆனால், இவை எதுவுமே எவ்வகையிலும் தமிழ்நாட்டின் அவர்களுக்கான படைப்புலகின் காத்திரத்தினையோ விரிவினையோ ஆழத்தினையோ ஏன் பம்மாத்துத்தனத்தினையோ சுயசாமரம், இலங்கைத்தீவட்டிகளையோ குறைத்துமதிப்பிட்டதாகாது. “ஈழத்தமிழே சுத்தத்தமிழ்” என்ற பம்மாத்துவாததோடு வெளிப்படையாகவே முரண்பட்டிருக்கின்றேன்; இன்றைக்குக் தமிழகக்கம்பித்தொலைக்காட்சித்தமிழாக இலங்கைத்தமிழ் இளந்தலைமுறையால் ஆக்கப்பட முன்னால், பிரிந்த வட்டாரவழக்குத்தமிழ்களாக அன்றி இலங்கைத்தமிழ் என்று ஒற்றைப்படையாக ஒன்று இருக்கவில்லை என்பதைச் சுட்டியிருக்கின்றேன்; இலங்கை எழுத்துத்தமிழ்கூட, சுத்தத்தமிழில்லை, ஆனால், அதீத வடமொழி சொருகின அசுத்தத்தமிழாக இருந்ததை ஈழத்தமிழர் சிலர் திட்டுகையிலும் சொல்லவேண்டியிருந்தது.

கருத்தொற்றுமை கொண்ட தமிழகப்படைப்பாளிகளுடன் இன்றைக்குவரை எதுவித முரணுமிருந்ததில்லை – அவர்கள் எல்லாச் சக்கை ஈழத்துப்படைப்புகளையும் விமர்சனமின்றி “பாவம் பாதிப்பட்டாரின் படைப்பு” என்ற வகையிலே தலையிலே வைத்துக்கொண்டாடாதவரை; மாற்றாக, தமிழகத்தின் அதிகாரமையச்சக்திகளுடன் அவ்வப்போது (தம்மை மையப்படுத்திக்) கூட்டணி வைத்துக்கொள்ளும் எஸ். பொ, சிவத்தம்பி, சேரன், அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, “நான் என்றைக்குமே ஆகமுடியாது என் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு, பொறாமை கொண்டு பிஞ்சுமுத்தலாய் வெம்ப வைக்கும் உலகமகாகவிஞன்” ஜெயபாலன் இவர்களோடு எனக்கு -அவர்களின் படைப்பு, விமர்சன, தம்மை மையப்படுத்தும் திறமைகளை எள்ளோ இலத்திரனோ குறைத்து மதிப்பிடாமலே – நிலைமுரண்பாடுண்டு – ஶ்ரீலங்காவின் அதிகாரமையச்சக்திகளுடன் கையைக் கோர்த்துக்கொண்டுள்ள வேறு இலங்கை/புலம்பெயர் “படைப்பு” “ஆளி”களோடு இருப்பதைப்போல. இவர்களின் வழியிலே இன்றைக்கு என் இளையநண்பர்கள் சிலரும் மெல்ல மெல்லக் காலடிவைத்துத் தமிழக படைப்புலவடக்கருந்துளை உள்ளிழுக்க நகர்வதையிட்டுக் கவலையும் விமர்சனமுமுண்டு. தன் சமூகத்தின் ஒடுக்குமுறைகளை ஒதுக்கிவிட்டு அல்லது அதையே தம்மூலதனமாக்கி வைத்து, தம்மை முன்னிலைப்படுத்தி இலக்கியமும் பாராட்டும் விருதும் போக்குவரத்தும் செய்யும் அரசியலோடு என்றைக்கும் பிரச்சனையிருக்கின்றது.

இவ்வகையிலேதான், -காணும் அத்தனை இயக்குனர் முகடுகள், சூப்பர் (ஸ்)டார்கள், உலகநாய(க)ர்கள், தல, வால், தளபதி, தலைவிதி நடிகர்கள்போலவே இசையமைப்பாளருக்கான பெருமைசேர, அடிதடி நிறைந்த காதற்காட்சிகள், “அம்மா என்கிற கன்னுக்குட்டி தேடும் பசு” சென்ரிமென்ற், “தங்காய் என்று ஒருநாள் யாரோ சொல்லித்தந்த மேஜர் பாடல்கள்” நிறைந்த படம் தந்த- பாலச்சந்தருக்குக் -அவரின் ஈழம் குறித்த கோணலான படைப்பிலே எதுவித விமர்சனமும் வைக்காமல், அவரின் வர்த்தகத்தைப் பாதிக்காத வகையிலே “நுண்|மென்புரட்சி” முடுக்கும் பாத்திரப்படைப்புகள் செய்யும் கண்காட்சிக்குக்- கண்ணீரை விடுகின்றவர்களை எண்ணி, அவரின் உடற்சூடு அடங்கமுன்னாலேயே ஒரு பதிவைச் சீர்பார்க்காது போடவேண்டியதாகின்றது. இப்பதிவுகளேதும் அடுத்த புத்தகக்கண்காட்சி எதிலுமோ அல்லது குறைந்தளவு ஏதேனும் சஞ்சிகையின் அடுத்த இதழிலோ ஏதேனும் ஒரு பேப்பரிலோ விரித்தோ சுருக்கியோ சீர்பார்த்தோ வாராதென அடித்துச்சொல்கின்றேன் – ஆனால், இதையே பாலச்சந்தருக்கு ரெடிமேற் கண்ணீர் விட்ட எத்தனை வலை, சமூகக்குறிப்புகள் சொல்லுமென்ற சிறுகணக்கையும் கேட்கிறேன், கணக்கினைக் கேட்டுத்தான் கட்சிகளும் இயக்கங்களும் பிரித்தனவாக்கும் என்பதையும் நினைவுறுத்தி ;-)

No comments: