Tuesday, September 15, 2015

"போர்க்களத்திலே ஒரு பூ" மேலான காதுல பூ



இசைப்பிரியா தொடர்பான "போர்க்களத்திலே ஒரு பூ" படத்துக்கு எஸ். வி. சேகர், "கைய புடிச்சி இழுத்ததை பார்த்தியா?" என்பதுக்கும்மேலாக, வன்புணர்ச்சி நிகழ்ந்ததுக்கு விழிய ஆதாரம் கேட்டிருந்தார் என்றும் அதன்படியே அவர் உள்ளடக்கிய தணிக்கைக்குழு படத்தினைத் தடை செய்துவிட்டது என்றும் சொல்லப்பட்டது.

இதன் பின்னால், தான் சொன்னதைத் திரித்து எழுதியதாகவும் பேஸ்புக்கிலே தன்னைக் கிண்டல் செய்வதாகவும் தொலைபேசி செய்து பயமுறுத்தியதாகவும் எஸ். வி. சேகர் தமிழ்நாட்டு நகர்காவலர் நிலையத்திலே முறையிட்டிருக்கின்றார்.


எஸ். வி. சேகர், " பெண்களைஇழிவுபடுத்தியோ, பெண்களை பாலியல் வன்கொடுமைக்குஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல்வன்கொடுமையில் ஈடுபடுவது போலவோ காட்சிகளை அனுமதிக்கக்கூடாது என்று அந்தச் சட்டத்தில்உள்ளது. இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பைஏற்படுத்துவது, நட்பு நாடுகள் மற்றும்அண்டை நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்கும்படி காட்சிகள் இருக்கக் கூடாது என்றும் அந்தச்சட்டம் சொல்கிறது. ஆனால், இவை எல்லாமே‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்றபடத்தில் உள்ளன. சட்டமன்றத்தில் தமிழகமுதல்வர் பேசியதை வியாபார நோக்கில்வெளியில் கொண்டுவரும்போது, அதற்கு தமிழக அரசின்அனுமதி வேண்டும். அதை அவர்கள் தரவில்லை.அந்தப் படத்தை எடுத்துள்ள கணேசன்என்பவர், குயுக்தியாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.இசைப்பிரியாவுக்கு நடந்த கொடுமைகள் சரிஎன்று நான் சொன்னதைப்போல சித்திரிக்கிறார்கள்.இசைப்பிரியாவுக்கு நடந்ததைப் போன்ற கொடுமை எந்தப்பெண்ணுக்கு ஏற்பட்டாலும் அது கண்டனத்துக்கு உரியது.அதை யாரும் சரியென்று சொல்லவில்லை.ஆனால், தேவையில்லாமல் முகநூலில் என்னைத் திட்டுவதும், தொலைபேசியில்மிரட்டுவதும் நாகரிகமான செயல்கள் இல்லை. இதுதொடர்பாக போலீஸ்கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.


தொலைபேசியிலே மிரட்டும் செயல் நாகரீகமானதில்லை என்பதை எவரும் ஒத்துக்கொள்வார்கள் (கட்சி அரசியல்வாதிகளும் தொண்டர்களும் குண்டர்களும் ஒத்துக்கொள்வார்களா என்பதைமட்டும் நாம் நாகரீகமாக ஒரு பக்கம் விட்டுவிடலாம்). இப்படியாக உண்மையிலே யாரேனும் மிரட்டியிருந்தால், அது கண்டிக்கமட்டும் தக்கதல்ல, தண்டிப்புக்குமுரியது; கூடவே, அவர்கள் எக்காரணத்துக்காக வெஞ்சினம் கொண்டு மிரட்டிக் கண்டிக்கின்றார்களோ அதன் நோக்கத்துக்கும் எதிரானதாகவே இம்மிரட்டல் தொழிற்படும் என்பதையும் இப்படியானவர்கள் உணரவேண்டும். அதேநேரத்திலே தொலைபேசியிலே மிரட்டும் செயலே நாகரீகமில்லை என்று கருதும் எஸ். வி. சேகர் என்ற தணிக்கைக்குழு உறுப்பினர் எப்படியாக ஒரு பெண்ணினைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதையோ எல்லாம் பேசாமலே போவதுதான் தன்நாட்டினதும் அந்நாட்டிலே உருவாகும் கலைப்படைப்பினதும் நாகரீகம் என்று சட்டத்தின்கீழே ஒளித்துவிளையாடுகின்றவர் போல எண்ணுகின்றாரோ தெரியவில்லை.

ராஜ்பாபர், பத்மினி கோலாபூரி நடித்த ‘Insaaf Ka Tarazu‘ வெளிவந்த 1980 இற்கு முன்னான காலத்திலேகூட, ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதுபோன்ற காட்சிகளை நிறையப் படங்களிலே பட மையக்கருத்துக்கும் காட்சிக்கும் சம்பந்தப்படாமலே காட்டியபோதே ஏற்றுக்கொண்டோமே! இப்போதுங்கூட, பாலியற்சொன்வன்முறைக்கு நாயகர்களும் அவர்களின் நண்பர்களும் உள்ளாக்கும்போதுகூட அவற்றையெல்லாம் நாயககுணாம்சயமென்றோ 'நகைச்சு-வை' -பண்பாடு என்றோ ஏற்றுக்கொண்டோமே அப்போதெல்லாம் இப்பெண்மீதான வன்முறை எவ்வகையிலும் பிரச்சனையாகவில்லை; "போர்க்களத்திலே ஒரு பூ" என்ற இப்படத்தின் மையப்புள்ளியே இசைப்பிரியா என்ற பெண் இராணுவவன்முறையின் பாற்பட்ட துயரையும் அவர் பெற்ற துன்பமுடிவினையும் சொல்லி அதனூடாக ஒரு மொழிபேசும் இனம் கண்ட அவக்காலத்தைச் சொல்லவருவதே; இதிலே எவ்வண்ணம் பாலியலின் துன்புறுத்தலுக்கு அப்பெண் உள்ளாகவேயில்லை என்று காட்டிப்போவது? வேண்டுமானால், இந்தியப்படங்களிலே மது அருந்தும், புகை பிடிக்கும் காட்சிகள் வரும்போது கூடவே கீழே "செய்யாதீர்கள்" என்றோ "கேடாகலாம்" என்றோ வேண்டுகோளோடு தோன்றுவதுபோல வன்புணர்ச்சி நிகழ்வதாக மறைமுகமாகச் சுட்டும் காட்சி வரும்போது, “" பெண்களை இழிவுபடுத்தியோ, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது போலவோ, கூட்டாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவததுபோலவோ காட்டுவது நாட்டின் இறையாண்மைக்கும் உள ஒழுக்கத்துக்கும் உகந்ததல்லஎன்று துணையெழுத்தோடவிட்டால், பாராளுமன்றத்திலேயே உட்கார்ந்திருந்து வரவுசெலவுத்திட்டவிவாதத்தின்போது தூங்காத வேளையிலே செல்பேசியிலேபிட்படக்காட்சி கண்டு களிக்கும் நாடாளுமன்ற.உறுப்பினர்கள் சரி என்று சொல்லிவிடமாட்டார்களா என்ன?

ஒரு நிராயுதபாணியான பெண்ணை இராணுவம் கூட்டுவன்புணர்ந்து கொன்றதை -அது தொடர்பான ஆடைகளற்ற அப்பெண்ணின் சீர்குலைந்த படங்களைத்தீவிர தமிழ்த்தேசியம்" பேசுகின்ற சிலரும் வலைத்தளங்களுமேகூட, அப்பெண்ணின் உற்றாரின் "வேண்டாமே!" என்ற வேண்டுகோட்களுக்கும் செவிமடுக்காது சமூகவலைத்தளங்களிலேயும் பரப்பிய, பரப்பும் துர்நிலையிலே,நேரடியானதற்றதாகச் சிலாகிக்கும் காட்சியாகச் சொல்வதை எப்படியாகச் சதையை வைத்துத் தர்ப்பைப்புல்யாகஹோமம் வளர்க்கும் அவநிலையை ஒவ்வொரு பாடற்காட்சியிலும் படுக்கைக்காட்சியிலும் காட்டும் திரைப்படங்களைத் தமிழ்|பாரதப்பண்பாட்டின்பேரிலே அனுமதிக்கும் ஒரு நாட்டின் தணிக்கைக்குழு தடை செய்கிறது?

எல்லாவற்றுக்கும்மேலாக, ஒரு பெண்ணை இராணுவவீரர்கள் வன்புணர்ந்துகொல்வதாகக் காட்டும் காட்சி எவ்வகையிலே இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதும், நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளைப் பாதிக்கும்படியுமான காட்சியாக ஆகிவிடுகின்றதெனப் புரியவில்லை. குறைந்தளவு இப்படம் 'இந்திய அமேதிகாக்கும் படையும் பிரம்படி ஒழுங்கையும்' பற்றிப் பேசும் படங்கூடயில்லையே! இதன்மூலம் என்ன உன்னத கருத்தினைச் சேகர் அங்கம் வகிக்கும் தணிக்கைக்குழு எல்லோருக்கும் சொல்லவருகின்றது? இல்லை, இங்குக் குறிப்பிடப்படும் ஒவ்வாத திரைக்காட்சிகள் -வன்புணராத,- இந்தியாவினையோ ஶ்ரீலங்காவினையோ விமர்சனம் செய்யும் வேறு காட்சிகள்தாமென்றாலுங்கூட, இதன் மூலம் சொந்த நாட்டின் மற்றைய படைப்பாளிகளுக்கும் கருத்தாளர்களுக்கும் இத்தணிக்கைக்குழு சொல்ல வருவது என்ன? “சொந்தநாட்டையோ அதன் நட்புநாட்டினையோ விமர்சிக்கும் எக்கருத்தும் அனுமதிக்கப்படாது; அனுமதிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் குந்தகமானதுஎன்ற வரிகள்தானா? பருப்புமூட்டைக்குள் மூட்டைப்பூச்சியை விட்ட பாக்கிஸ்தான் தீவிரவாதியைத் தேடும் விஜயகாந்த், அர்ஜுன் வகையறாக்கள்கூட இத்தகாவரிகளைப் பேசியதில்லையே! எவ்விதமான மிஸா(ரி) சமுதாயநீதி இது? (இங்கு எப்படியாக 'ரெரரிஸ்ட்', 'மட்ராஸ் கபே' போன்ற படங்கள் அனுமதிக்கப்பட்டன என்பது வியப்புக்குரியதல்லவே!)

பேஸ்புக்கிலோ ட்வீற்றரிலோ அல்லது வேறெந்த சமூகவலைத்தளத்திலோ விமர்சனமே வரக்கூடாது, தொடர்ச்சியாகப் பாராட்டுகளே வரவேண்டுமென்று விரும்பும் முதலாவது தமிழ்நாட்டுத்திரையுலகப்பிரபலம் சேகரில்லை; சின்மயி, சுகாசினி, விஜயகாந்த் போன்ற சிலர் ஏற்கனவே சென்னை இணையக்குற்றத்தடுப்புநகர்காவலரிடம் முறையிட்டோ வெளிப்படையாகத் தம் செயல்களையோ தம் படைப்புகளையோ கிண்டல் செய்யக்கூடாதென்றோ காராசாரமாகச் சொல்லியிருந்தார்கள். கிண்டல்கள் வரையறைமீறிய இடங்களுமில்லாமலில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். ஆனால், முறையீடுகள் மிகத்தேர்ந்தெடுத்தே கவனத்திலே முறையீடு பெறுவோரிடமிருந்தும் பெறப்படுவதாகத் தோன்றுகின்றது. (இங்கே, டி. ராஜேந்தர், பவர் ஸ்டார், விஜய் போன்றவர்களின் உன்னதம் நம்மவர்களுக்குத் தெரியவேண்டும். எத்தகைய அடிகளையும் தாங்கிக்கொண்டு, நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் அவர்கள்; சொல்லப்போனால், "கலக்கப்போவது யாரு?" முதல் எத்தனையோ தொலைக்காட்சிநிகழ்ச்சிகளுக்கு வராமலே வாழவைத்துக்கொண்டிருக்கும் தெய்வங்கள் அவர்கள். இவர்களைக் கிண்டல் செய்யும் 'நகைச்சுவையாளர்களை' எவர்களும் சட்டத்தின்கீழே கொணர்வதில்லை; 'கறுப்பு', 'குண்டு', 'மனைவி', 'கணவன்' என்று நகைச்சுவையின்பேரிலே இழிவுபடுத்துகின்றவர்களும் கைதட்டையும் காசைத் தட்டிலும் வாங்கிப்போய்விடுகின்றார்கள்.)

அரசியல்வாதிகளினையும் திரைப்படமுகங்களையும் அவர்களின் செயற்பாட்டுக்காக விமர்சனம் சமூகவலைத்தளத்திலே செய்தாலுங்கூட, கிண்டல் செய்வதாகவோ சட்டத்தின் துணையோடு உள்ளே தூக்கிப்போட்டு மிரட்டிக் கருத்தை அமுக்குவதாலேமட்டும் இறைமையினையும் நேர்மையினையும் நிலைக்குத்தாக நிறுத்திச் சூரியநமஸ்காரம் செய்ய வைத்துக்கொள்ளமுடியுமா, சுதந்திரதினத்திலே தேசியக்கொடியினை ஏற்றுமிடத்திலேயே செருப்பாலே தமக்குள்ளே அடிபட்டுச் சமூகவலைத்தளங்களிலே துண்டவிழியமாகக் கட்சிப்பிரமுகர்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டிலே?

ஆனால், முதலிலே ஈழம் தொடர்பான படத்துக்கு இப்படியான குதர்க்கம் செய்து தடை செய்த தனியாளோ குழுவோ எஸ். வி. சேகரோ, அவர் அங்கம் வகிக்கும் தணிக்கைசபையோ அல்ல(ர்). இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புகழேந்தி தங்கராஜின் "காற்றுக்கென்ன வேலி?" இனைத் தணிக்கைக்குழு தடைசெய்திருந்தது. (அதன்பின்னாலே, தணிக்கையதிகாரி ராஜுவுக்கும் புகழேந்திக்குமான விவகாரம் விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுபடம் எடுத்தார் என்று புகழேந்தியைப் பற்றி ராஜு சொல்லி அவதூறு வழக்கானது இன்னொரு கிளைக்கதை.) இதேநேரத்திலே, சந்தோஷ் சிவனின்ட்ரெரரிஸ்ட்’, ‘மல்லி’, ‘இனம்’, ஜான் ஆப்ரஹாமின்மெட்ராஸ் கபேபோன்ற படங்கள் இவை போன்ற எத்தொற்றுவியாதியும் கொண்ட படங்களாகக் காணப்படாது, தேசபக்தியையும் சுண்டுவிரல் இறையாண்மையையும் விண்டுகொண்டு பிறந்தபொன்னாட்டுக்குப் பிளட்டினவாடை போர்த்தும் படங்களாக விளம்பரமாக்கித் தணிக்கைக்குழுவின் தாராளவாதத்தினாலே ஓடவிடப்பட்டன என்பதையும் கவனிக்கவேண்டும்.

முடிவாக, தொடர்ச்சியான வன்புணர்வுகளைப் பெண்கள் எதிர்கொள்ளும் நாட்டிலே, பெண்களின் தனிப்பட்ட ஆடையணி, உணவு விருப்புவெறுப்புகளை, யாருடன் எப்போது எங்கே நடமாடுவது என்பதை அவர்கள் அறியாத தாமேதோன்று மதக்கல்சுரல்கமிசார்களும் கட்சித்தொண்டர்களும் நாட்டின் புராதனப்பண்பாட்டின் அடிப்படையிலே தீர்மானித்துத் தண்டனை வழங்கும் நாட்டிலே, பெண்களுக்கு நிகழும் வன்புணர்வு பற்றிய வெளிநாட்டுவிவரணங்கள் நாட்டினை இழிவுபடுத்துகின்றன, இறையாண்மையைக் குத்திக் குதறுகின்றன என்பதன்பேரிலே தடை செய்யப்படும் பொதுச்சிந்தைப்போக்கிலே, “ஈழம் தொடர்பான இந்திய ஆதரவுப்பதிப்பாளர்களின் பரபரப்புப்புத்தகங்களை விற்பதைக்கூட நாட்டின் இறையாண்மைக்கு எதிராகக் கருதும் சகபதிப்பாளர்கள், சங்கங்கள்தம் செயற்பாடுகள் சரியேதான் என்று அடுத்த புத்தகக்கடைக்கு வீரப்பன்வதம் பற்றிய புத்தகம் வாங்க நகர்ந்துபோகும் மக்களின்மனப்பாங்கிலே எஸ். வி. சேகரின் கருத்தினைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. பாமினி எழுத்துரு சம்பந்தமாகப் பேசும்போதுகூட தமிழ்-பார்ப்பனர் என்று தொடர்பின்றி நகைச்சுவையை அசர்ப்பந்தமாக நுழைக்க முடிகின்றவர்கள், அவர்களின் நகைச்சுவைக்குச் சிரிக்கின்றவர்கள்கூட தொடர்ச்சியாகவே இப்படியான சந்தர்ப்பங்களிலே கருத்தினைச் சொல்லாமலே சுயதணிக்கை செய்துகொள்கின்றபோது தாம் சொல்லாது விலகியிருப்பதிலேயே தம் கருத்தினை வெளிப்படையாகச் சொல்லிவிடுகின்றார்கள் என்று சொல்லமுடிகின்றது.

இவ்வகையிலே பார்த்தால் . ஆர். ரஹ்மானுக்கும் மஜீதிக்கும் மதத்தினை முன்னிறுத்திப் படத்தினை எடுத்ததற்காகப் பத்வா விதித்த மும்பாய் அமைப்புக்கும் எஸ் வி சேகரின் தணிக்கைக்குழுவுக்கும் எந்த வேறுபாட்டினையும் காணமுடியவில்லை. எல்லாம் தமக்கான திருப்திக்கான விதிகளைக் கண்டுபிடித்து நூலாலே தலையையும் வாலையும் கட்டித் தொடர்பு கண்டு கருத்துத்தடைசெய்யும் வன்மமே மிஞ்சுகின்றது.

ஆனால், ஒன்று; இத்தகைய நாட்டின் கூட்டுமனப்பாங்கு இறையாண்மை வரைவிலக்கணத்தின்வழியிலே நீண்டகாலப்போக்கிலே பாதிக்கப்படுவது, இறந்துபோன இசைப்பிரியா இல்லை; இன்னமும் வாழப்போகும் இந்தியப்பெண்கள்தாம்; இறையாண்மையின் பேரிலே நட்புநாட்டின் கூட்டின்பேரிலே அத்தனை கொடுமைகளையும் அமுக்ககேட்பதினாலே நொருங்கிப்போவது, ஏற்கனவே நொருக்கப்பட்ட கூட்டுநாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகமல்ல; ஒருங்கிக்கொண்டிருக்கும் உள்நாட்டின் கருத்துவெளிப்பாடுதாம். துணுக்குத்தோரணங்களே நகைச்சுவையான நாட்டிலே ஸ்ராண்ட் அப் கொமெடியன்களே தேசிய கொடிகாத்த குமரர்களாகட்டும்.

வந்தே.. ஹும்.. வரவே வேண்டாம்! ஆசீர் எமக்கு! வாதம் உமக்கு!

No comments: