Friday, December 11, 2015

கலக்கு! கலக்கு! நல்லாக் கலக்கு! கலக்கிட்டியா? அதிலை ஒரு நூறு கிராம் பார்சல் பண்ணு

நைத்திரேற்றுக்கும் கல்சியம் காபனேற்றுக்கும் கிணற்றிலே கழிவுநெய் இருக்கின்றதுக்கும் என்ன சம்பந்தம்? சுன்னாகத்தை வைத்து அரசியல்வாதிகள் முதல் அறிவியலாளர்வரை எல்லோருமே குழப்புகின்றார்களோ என்று படுகிறது.

நைத்திரேற்று பசளைகளோடு சம்பந்தப்பட்ட ஊட்டம் (nutrients) மிகைத்த பிரச்சனை; அதியூட்டநிலை (eutrophication) நீர்நிலைகளிலே ஏற்பட்டு, பாசியதிவளர்ச்சியடைதலுக்கும் (algae bloom) ஒட்சிசன்குறைபடுதலும் (hypoxia) நீருயிரிகள் ஒழிந்துபோதலுக்கும் காரணமாவது நைத்திரேற்று. இது யாழ்க்குடா நீர் சார்ந்த பிரச்சனைகளிலே ஒரு கூறு. யாழ்க்குடாவிலேயிருக்கும் சுண்ணாம்புப்பாறைகளினாலே (limestone) நிலத்தடி நீர் (groundwater) வெள்ளைபடியும் சவர்க்காரம் நுரைக்கவைக்காத வன்நீராக (hard water) இருக்க வழிவகுப்பது கல்சியம் காபனேற்று. இது யாழ்க்குடா நிர் சார்ந்த பிரச்சனைகளிலே இன்னொரு கூறு.

(இவற்றைவிட, கடல்நீர் உட்புகுவதாலே (Seawater intrusion) நிலத்தடிநீரும் நிலமும் உப்பேறுவதும் இன்னொரு நீர் சார்ந்த பிரச்சனை.
வழுக்கியாறு போன்ற மழைக்காலத்திலேமட்டும் படுக்கைபார்த்து ஓடும் மாயவாறுகள் தவிர்த்த வானம்பார்த்த பூமியிலே அளவுக்குமீறி, நிலத்தடிநீரினை வறுகியிறைப்பது, நிலத்தடிநீர்மட்டம் (water table level) தாழ வைப்பது மற்றுமொரு நீர் சார்ந்த சிக்கல்)

கடைசியான பிரச்சனை, இந்த எரிநெய்க்கசிவு காணும் கிணற்றுநீர்ப்பிரச்சனை.

ஆனால், நைத்திரேற்று, காபனேற்றுகளை அளந்துகொண்டு, கிணற்றிலிருப்பதாகச் சொல்லப்படும் எரிநெய்க்கசிவின் தாக்கத்தை (impacts of oil pollution) நைத்திரேற்றுத்தான் அகற்ற உதவும் எனும் இரசவாதத்தை என்ன சொல்வது?

யாழ்க்குடா நீரிலிருக்கும் எல்லா வகை -நீரளவு, நீர்த்தரம், நீர்ப்பகிர்வு- பிரச்சனைகளுக்கும் ஒரே பொறியிலே ஐந்து எலி பிடிக்கும் வழிமுறையை மீண்டும் மீண்டும் சொல்வதை என்ன சொல்வது? அதுகூட, நடைமுறையிலே பரீட்சித்துப் பார்த்த தொழில்நுட்பத்தீர்வாகவில்லாமல், ஆய்கூடத்திலே பரிசோதிப்புநிலையிலே பல கட்டுப்பாடுகளுடனான மாதிரிப்பொறியிலே சிற்றளவிலே (controlled experiments in/on prototypes at the pilot-scale) செய்து காட்டுவது எவ்வகையிலே பயனாகும்? மாதிரிகளுக்கு பயன்படளவு சார்ந்த எல்லைகளுண்டு.

நிலத்தடி நீர் பரவும் பகுதி சீரான மண்ணமைவோடிருப்பதில்லை; பல்வகை மண்பருக்கைக்கூறுகளின் சேர்வும் (composition of soil particles) அதுசார நீரூடுதன்மையும் (permeability) மாசு பரவும், வடிகட்டப்படும் (contaminant dispersion and filtration) பொறிமுறையும் ஆய்வுகூடப்பரிசோதனை வெற்றிகளைக்கூட இலகுவிலே நடைமுறையிலே செயற்படுத்தவிடா.
"கலக்கு! கலக்கு! நல்லாக் கலக்கு! அதுலருந்து ஒரு நூறு க்ராம் பார்சல் பண்ணு!" தொழில்நுட்பம், அறிவியலா? அவியலா?
சத்து அசத்தைச் சாராது; அசத்து அறியாது

டிசெம்பர் 7, 2015

No comments: