Friday, December 11, 2015

"எனக்கும் கறுப்பு நண்பர்கள் உள்ளார்கள்; ஆனால்,...."

"எனக்கும் கறுப்பு நண்பர்கள் உள்ளார்கள்; ஆனால்,...." என்று நழுவும் வெள்ளைக்காரர்கள்போன்றவர்களை மாவீரர் தினங்களிலே பேஸ்புக்கிலே காணலாம்.


மாவீரர் தினமென்பது எல்லா இயக்கங்களிலும்போய் சுயநிர்ணய உரிமையின் பேரிலே கொல்லப்பட்ட அத்தனை ஆயுத, கருத்துப்போராளிகளுக்கும் உரிமையானதும் நினைவுகூர்வதுமானதாகும். அனைவருக்குமான பொதுநாளென்று ஒன்றை ஏற்படுத்த இவர்களிலே எவருமே ஒத்துவரப்போவதில்லை என்பதாலே இருக்கின்ற இந்நாளிலேயே அவர்களை நினைவுகூர்ந்துவிட்டுப்போக என்னைப்போன்றவர்களுக்கு முடியும்.
ஆனால், குறிப்பிட்ட சிலர் தொடர்ச்சியாக மாவீரர்தினமென்றால், புலிகளின் வாலைப் பிடித்திழுக்கும் நோயாலே "மற்றவர்களும் மாவீரர்களே!" என்ற எதிர்வாதங்களை வைப்பதையே முன்னிலையிலே நிறுத்துகின்றனர். இதை வரட்டுத்தனமான புலியாதரவாளர் சிலர், "துரோகி-தியாகி" முரணிலைவாதிகள் எதிர்த்துக்கூவினாலும் நிதானமான முற்போக்குத்தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கமாட்டார்கள். 


ஆனால், இந்த "புலியெதிர்ப்பே புகல்தத்துவம்" என்றுநிற்கின்ற வரட்டுத்தனமான புலியெதிப்பாதரவாளர்கள், "மாவீரர்கள் என்போர் கொண்ட நோக்கின்பேரிலே கொல்லப்பட்ட எல்லோருமே" என்று இன்று கட்டம்போட்டு எழுதுவதைப் பத்மநாபாவின் நினைவுகூர்தல் நிகழ்ந்த சில நாட்களின் முன்னாலும் உமா மகேஸ்வரனின் நினைவுகூரல் நிகழ்ந்த சில மாதங்களின் முன்னரும் எவருமே குறிப்பிடவில்லை. மாவீரர் தினம் வரும்போது மட்டுமே "போலித்தமிழ்த்தேசியவாதிகள்", "புலம்பெயர்தமிழ்த்தேசியவாதிகள்" என்ற பட்டியலிலே திட்டித்தீர்ப்பதும் தமிழினி, இசைப்பிரியா குடும்பத்தினரின் துயர்களைச் சுட்டுதலும் நிகழ்கின்றது. இத்தனை செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாகக் காணப்படும் தமிழ்த்தேசியம் என்பதை முதன்மைப்படுத்தும் எதனையும் குற்றமுள்ளதாகவே அடித்துக்கூட்டி ஒன்றாய் அடைத்துப்போடும் இவர்களின் தன்மை மிகத்திட்டமிடப்பட்டதாகவே தோன்றுகின்றது. 


1. தமிழினி, இசைப்பிரியா உட்படப் படம்போட்டு அறைகூவி ஈழம் விற்றுப் பேசிக்கொண்டிருக்கும் பழைய "மாற்றுக்கட்சி மாறாத ஈழப்புலிகள்" எத்தனை பேர், சத்தம்போடாமலே செயற்படுகின்றவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கினை இப்படியாகக் குறிப்பிட்டு, எங்கு பட்டாலும் "வள்"ளென்று காலைத்தூக்கும் நடராஜர்கள் எழுதியிருக்கின்றார்களா?


2. "தமிழினி, இசைப்பிரியா போன்றோர்களுக்கு என்ன செய்தீர்கள்?", "பாதிக்கப்பட்ட புலிகளின் இன்றைய வாழ்க்கைக்கு என்ன செய்தீர்கள்?" என்று படங்களோடு பேஸ்புக் அறிக்கைகளும் சுவரொட்டிகளும் விடும் புலிகளல்லாத மாற்றியக்கங்களிலிருந்தவர்களும் பழையபுலி_புதியகவிகளும் என்ன செய்தீர்கள்? செய்கின்றீர்கள்?
இவற்றைப் பட்டியலிடவேண்டும்; தனிப்பட்ட அறிக்கையிட்டோ, புத்தகம்போட்டோ இவற்றைச் செய்தோம் என்று மிருதங்கமோ உடுக்கோ பறையோ பகிரங்கத்திலே பேஸ்புக்கிலே அடிக்காத தனிப்பட்ட புலியாதரவாளர்கள், தமிழ்த்தேசியவாதிகள் போல அப்படியாக ஊருக்கும் உலகுக்கும் ஒலியெழுப்பாத புலியெதிர்ப்பாளர்களும் பழம்புலி_புதுக்கதைஞர்களுமிருக்கலாம். 

3. சிரியன் குழந்தைக்காகச் சொட்டுக்கண்ணீரும் பாரிஸ் எரிவதற்கு மூவண்ணப்பட்டைகளும் பேஸ்புக்கிலே போடுகின்றவர்கள், இத்தனை நாளும் ஏன் இன்றைக்குங்கூட நீங்கள் செய்வது, ராஜபக்‌ஷ, வாசுதேவவினை வரவேற்ற பெருநிலையிலிருக்கின்றவர்கள், குர்திஷ் பெண்போராளிகளை முகப்பிலே வைத்துக் காதலிக்கின்ற டம்மி ஐரோப்பிய, கனடா ரைப்பிஸ் மார்க்சிஸ்ருக்கள் முள்ளிவாய்க்காலிலே தலை பிளந்த குழந்தைப்படம், முலை கருங்கிய தாயின்படம்போட்டபோது மட்டும் ஶ்ரீலங்கா இராணுவத்தையும் அரசினையும் வளமாகவிட்டுவிட்டு, புலிவாலை முறுக்குவதிலேயே மும்முரமாக நிற்கும் பொய்விளையாட்டாளிகள் உங்களுக்கும் நீங்கள் திட்டும் காசுபதுக்கிய புலம்பெயர்பினாமிப்புலிகளும் என்ன வேறுபாடு உண்டெனக் கருதுகின்றீர்கள்? இரு சாராருமேதான் மாவீரர்தினத்தை வைத்து உங்கள் பிசினஸை அமோகமாக உங்களின் விசிறிவாழைகளிடையே நடத்திவைக்கின்றீர்கள். பிறகெதற்கு பால்வெள்ளை நான், தயிர்வெள்ளை நீ என்ற தனகலும் தள்ளுப்பாடும் வெள்ளைவேட்டிக்கள்ளத்தனமும்?

No comments: