Wednesday, July 26, 2017

ஆற்றோடு இழுப்பட்டுப்போவோம்

முல்லைத்தீவிலேயும் திருகோணமலையிலும் நயினாதீவிலும் சிலாவத்துறையிலும் மூதூரிலும் ஆரையம்பதியிலும் வாழைச்சேனையிலும் அறுகம்குடாவிலும் திட்டமிட்டே தமிழர் பகுதியிலே ஏற்படுத்தப்படும் குடியேற்றங்களைப் பற்றிப் பேசத் துணிவற்ற நாம் சுமந்திரனையும் இளஞ்செழியனையும் போன்ற கற்ற 'கட்டப்பஞ்சாத்துக்காரர்'களையும் சட்ட 'என்கவுண்டர் ஹீரோ'க்களையுமே நல்ல குடிமக்களாக சிறிலங்கா நாட்டுப்பற்று மிகுந்த பெரும்பான்மை சமூகத்தினர் அங்கீகரிக்க, ஏற்றுக்கொண்டு தலையிலே சுமந்து கொண்டாடும் நளாயினிசமூகத்தவர் ஆனோம். (இப்போதெல்லாம், "கட்டப்பஞ்சாயத்து', 'என்கவுண்டர்' போன்ற தமிழகத்து உதிர்|ரிமொழியின் திசைச்சொற்களற்று நாம் நமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமுடியாததாலே, இவ்வாறாகச் சுட்டவேண்டியிருக்கின்றது)

 இளஞ்செழியன் ஒரு திறமான நீதிபதியென்றே கொள்வோம்;  சட்டத்தரணி சுமந்திரனைப்போல சிறிலங்கா அரசினை முறித்துக்கொள்ளாத திடமான நீதிபதியும்கூட. ஆனால், நல்லூரடியிலே நிகழ்ந்த சூட்டுச்சம்பவத்திலே அவரினை, கொலைசெய்யப்படுமளவுக்குப் பாதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு போராளியாகக் காட்டுவது எத்துணை நாம் உணர்ச்சி வசப்படுதலிலே நியாயத்தையும் நிகழ்வினையும் தொலைத்துவிட்டு நிற்கின்றோமென்று காட்டுகின்றது.

வீதியிலே நாட்டின் சட்டதிட்டங்களாலே தட்டிக்கேட்க ஆளில்லாமல் கெட்டுப்போன குடிமகன் ஒருவன் பண்ணிக்கொண்டிருந்த நுழைவுச்சீட்டில்லாத கேளிக்கை நிகழ்வினைத் தாண்டி இளஞ்செழியனின் வாகனம் போகமுடியாததாலே, இறங்கிப்போன அவரின் மெய்ப்பாதுகாவலர்கள், நிதானமின்றிக் கூத்தடித்துக்கொண்டிருந்தவரிடம் கைத்துப்பாக்கியினை எடுத்து மிரட்டுவதையெல்லாம் சட்டத்தினையும் ஒழுங்கினையும் ஏற்படுத்தும் நடவடிக்கை என்று கொள்ளலாமா?    கடமையிலே ஒருவர் இறந்ததையும் அதற்காக அவரின் அதிகாரி குமுறி அழுததையும் கடமை உணர்ச்சியின் தன்மையாகவும் மனிதத்தின் தன்மையாகவும் நிச்சயமாகக் கொள்ளலாம். ஆனால், இந்நிகழ்வினை பழம்புலிப்போராளி இளஞ்செழியனைக் கொல்லவந்ததாகத் திரித்து அவரைத் திருநிலைப்படுத்தும் அற்பத்தனம், ஓரிராண்டுகளுக்குமுன்னால், சுமந்திரனைக் கொல்ல முயற்சி செய்ததாகக் காட்டிச் சிலரைச் சிறை வைத்திருக்கும் அரசியலுத்திக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. பெருந்தலைகளான கருணாக்கள், கேபிகள் இவர்களையெல்லாம் உள்வாங்கிக்கொண்ட அரசுக்கும் அதனை மறுத்தோடாதாருக்கும் 99 வரை மூன்றாண்டுகள் புலிகளிலே இருந்த ஒருவர் இளஞ்செழியனைக் கொல்ல வந்ததாகக் காட்டும் தேவை அரசியலற்றி வேறென்ன? தமது காணிகளினை எடுத்துக்கொள்ளாதிருக்கவும் எடுத்ததை திரும்பத்தரவும் காணாமற்போன உற்றாரின் குறித்த நீதி கேட்டுத் தொடரும் தாய்மார் குழந்தைகளின் கண்ணீரினைக் கண்டுகொள்ளாத அத்தனை பேரும் இளஞ்செழியனின் கண்ணீருக்கு நொருங்கிப்போவதை மனிதநெகிழ்வுக்குமப்பால் வசதியான அரசியல் என்றுதான் பார்க்கமுடிகின்றது.

 இங்கே அரச எந்திரங்கள் எத்துணை இலகுவாக, ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் தன்மையைக் கொண்டிருக்கின்றதென்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம்.  வீதியிலே குடிமக்கள் நின்று செய்யும் குழப்பங்களையும் சட்டவிரோத கள்ளச்சாராயங்களையும் கேரளாக்கஞ்சாக்களையும் மதகுச்சண்டியர்களையும் வாள்வெட்டுகளையும் கடந்த ஒன்பதாண்டுகளாக எத்துணை திட்டமிட்டே பெருகவிட்டிருக்கின்ற அரசினையும் இதே மெய்பாதுகாவலர்களும் நீதிபதியும் வேலைசெய்யும் சட்டமும் ஒழுங்குமான துறைகளையும் கண்டிக்க மறக்கின்றோம் அல்லது மறுக்கின்றோம்.

சிறிலங்கா அரசும் அதனியந்திரங்களும் அவற்றுக்காகக் கண்ணீர்விடும் அத்தனை மொழி, இன, மதமக்களும் மெய்யாகவே நீதியும் நேர்மையும் கொண்டவர்களாகவிருந்திருப்பின், 2009 இலே என்ன நிகழ்ந்தது என்ற பாரபட்சமற்ற விசாரணைகூட வேண்டாம், குறைந்தளவும் கேரள கஞ்சாவினையும் வீதிச்சண்டியர்களையும் சட்டவிரோதக்குடியேற்றங்களையும் ஒடுக்குவார்களா? தடுப்பார்களா? இல்லாவிட்டால், சுமந்திரன், இளஞ்செழியன் போன்றவர்கள் இலங்கையின் "பிக்பொஸ்ஸ்" நிகழ்வின் இரு நடிகர்களாகமட்டுமே பலராலே பார்க்கமுடியும்.

ஜூலை 26 உள்ளிட்ட இவ்வாரத்திலே எண்பத்து மூன்றிலே எமக்கிழைக்கப்பட்ட கொலைகளையும் அவற்றைத் தொடர்ந்து இன்னும் ஒடுக்கும் நொருக்கும் துயர்களையும் தன்னலமற்று அழிந்து மறைந்துபோன அனைத்துத்தியாகிகளையும் நினைவுகூர மறந்துவிட்டு, இளஞ்செழியன் போன்ற அரசியந்திரத்தின் அற்புத வீட்டடிமைகளுக்கு நிகழாத துன்பத்தையும் கற்பனைக்கதைகளினையும் வீரபுருஷனின் கதையாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

பல்வேறு பொம்மைகளை வைத்து இயக்கப்படும் பிக்பொஸ்ஸ் தொடர்நிகழ்ச்சிகள் சூடேற்றும்பொழுதிலும் நம்மிலே சிலர் ஜூலை 83 இனையும் மே 09 இனையும் இன்னமும் மறக்கவில்லை; மறக்கவும் போவதில்லை.

Thursday, July 13, 2017

வீர சந்தானம்

பட மூலம்: தளவாய் சுந்தரம்

உயிர்நனைத்த ஓவியங்களுக்கும் ஒத்த உரிமைக்குரலுக்கும் மெத்த நன்றி.
சென்று வருக!

Thursday, July 06, 2017

திருகோணமலை இந்துக்கல்லூரியும் சிறப்புவிருந்தினரும்திருகோணமலை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுவிழாவுக்கு இந்தியத்துணைத்தூதரக அதிகாரி நடராஜனைச் சிறப்பு விருந்தினராக அழைத்தது பற்றிய என் சொந்தக்கருத்து; கடந்த சில நாட்களாகச் சொல்லாமலே தவிர்க்க முயன்றேன். ஆனால், இன்றைக்குக் கண்ட ஒரு விளக்குமாற்றுவிளக்கத்தின் பின்னாலே சொல்லாதிருக்க முடியவில்லை;


இந்தியத்தூதரகமும் இராமக்கிருஷ்ணசங்கமும் ஒன்றல்ல. இராமகிருஷ்ணசங்கம் அரசியல் அமைப்பல்ல (விவேகானந்தரின் இந்துப்புத்தெழுச்சி அரசியலை அது வந்த காலத்தையிட்டு விட்டுவிடலாம்).   ஆனால், இந்தியத்தூதரகம் இந்தியாவின் நலனை ஈழத்திலே நுழைப்பதற்காகமட்டுமே இயங்குவது.


நடராஜன் என்ற ஆசாமி அவரின் நாடான இந்தியாவின் நலனுக்காக மட்டும் எதையும் செய்யக்கூடியவர்; யாழ்ப்பாணத்திலே ஹிந்தியினைக் கற்பிக்கவும் ஹோலிப்பண்டிகையை நடத்தவும் முனைகின்றவர். யாழ்ப்பாண Managers’ Forum இலே “யாழ்ப்பாணப்பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது எப்படி?” என்று ‘அழைப்புக்கு’ இணங்கிப்போய் விரிவுரையாற்றுகின்றவர். இந்தியாவின் விரல்கள் எம்மீது எவ்வண்ணம் விளையாடுகின்றதென்று நாம் அறியாதவர்களில்லை. சாம்பற்றீவின் லக்ஷ்மிநாராயணர் கோவிலைப் போன்ற பிரமாண்டத்தை தனியொருவர் கட்டினார் என்று நாம் எவருமே நம்பவில்லை; அதன் பின்னே இயக்கும் விசைகளை நமக்குத் தெரிகின்றது. உள்நாட்டின் ஆசாரிகளுக்கும் அம்புலன்ஸ் ஓட்டிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலையில்லாமலிருக்க, இந்தியாவிலிருந்து அழைப்போம் என்று அழைக்கும் நிலையிலே கொணர்ந்து எம்மைத் தள்ளியதிலே இந்தாளின் இந்தியத்துணைத்தூதரகத்துக்கும் பங்குண்டு.  சொல்லப்போனால்,  ஈழத்திலே இயல்பாகவிருந்த சைவத்தினை அழித்து, இந்தியாவின் வைஷ்ணவம், அனுமான், சாஸ்தா எல்லாம் உள்ளடங்கிய இந்து'த்துவா'ப்பொதியினை நம் பண்பாடு என்று திணித்துப் பொதிக்கும் சிக்கலைக் காண்கிறோம். சம்பந்தமேயற்ற அப்துல் கலாம் சிலையை யாழ்ப்பாண நூலகத்திலே வைத்துத் தலையாட்டிய வெட்கக்கேட்டினை ஒத்த நிலையையே இப்போது நம் இந்துக்கல்லூரியும் செய்திருக்கின்றது. நாம் இந்தியாவின் பொதிப்பண்டங்களோ பிதிர்ப்பிண்டங்களோ அல்ல.  யாழ்ப்பாணத்திலும் ஈழத்தின் மற்றைய பகுதிகளிலும் இந்தியாவின் துணைத்தூதரகத்தின் கை எவ்விதம் அழுத்தி விரிகின்றதென்று அறிந்த பின்னும் நாம் இந்துக்கல்லூரியிலே இந்தாளுக்கு ஓர் அழைப்பினைக் கொடுத்திருக்கவேண்டுமா?


சொந்த இந்திய நாட்டிலே சக மனிதர்களின் ஏழ்மையையும் சாதியத்தையும் திருத்தமுடியாத நாட்டின் தூதர்களெல்லாம் திருகோணமலை இந்துக்கல்லூரிக்கு அள்ளித்தருவார்கள் என்று நாம் நம்புகின்றோமானால், நம்வங்கம் தந்த பாடத்தினைக் கற்றுவிட்டும் மாலைதீவு ஓடிப்போய் இந்தியாவுக்குச் சேவை செய்து மாய்ந்த” ஈழப்போராட்டம் நமக்குத் தந்த அரசியலைப் பற்றியும் இத்துணை காலம் நமக்குத் தந்த பட்டறிவிலிருந்து நாம் கற்றுக்கொண்டது பற்றியும் சொல்ல எதுவாக மிஞ்சி இருக்கின்றது? ஒரு புறம் கிறீன் திருகோணமலையென்று இந்தியாவின் நிலக்கரி மின்னாலையை எதிர்க்கின்ற தலைமுறை ஒன்று; மறுபுறம், இந்திய நலனே நம் நலனெனக் கருதச் சொல்லும் அதன் தந்தைத்தலைமுறை வேறொன்று. இந்தியாவின் துணையுடான இத்தனை கொடூரங்களும் கொலைகளும் எமக்கு இழைக்கப்பட்டபின்னரும் இந்தியத்தூதரகம் நம் நலனுக்காக உதவும் என்று எப்படியாக நாம் எதிர்பார்க்கின்றோம்?


இந்துக்கல்லூரியும் மற்றைய திருகோணமலையின் நகரினைச் சார்ந்த பெருங்கல்லூரிகளும் தம் சுயத்தினைக் காத்துக்கொள்ளவேண்டும்.  இனிவரும் காலத்திலே வெளிநாடுகளிலிருந்து திருகோணமலைக்கு உதவ எண்ணுகின்றவர்கள், பெருங்கோபுரங்கள் கொண்ட பணமுதலைகளின் ஆலயங்களுக்கும் இந்தியாவின் பின்னாலே செல்லும் பெரும்பாடசாலைகளுக்கும் உதவாமல், கிராமப்புறங்களின் பாடசாலைகளுக்கும் எல்லையைக் காத்து இன்னமும் எமது இருப்பினை நிறுவும் சிறுகிராமக்கோவில்களுக்கும் கொடுக்கவேண்டும்.


இந்துக்கல்லூரி என்னைப் போன்ற பலருக்கு அடிப்படைக்கல்வியினைத் தந்து வாழ்க்கையை அமைத்துத் தந்தது; ஆனால், இப்படியான இந்திய நலனைப் பேணும் போக்கிலேதான் போகுமென்றால், நம் போன்றாரின் எளிய ஈடுபாடும் அக்கறையுங்கூட அற்றுப்போகும்.


 இந்தியா ஆட்சியதிகார இயாப்பின்படி ஒரு சைவ நாடு அல்ல - சிங்கள பௌத்த வெறியர்களுக்கு ஈடான மாட்டிறைச்சி தின்னுகின்ற முஸ்லீம்களைக் கொல்லும், ஹிந்தியைத் திணிக்கும் இந்துத்துவா அரசு ஆட்சியிலிருந்தாலுங்கூட. கிறீஸ்தவ அமைப்புகளும் முஸ்லீம் அமைப்புகளும் செய்யும் திட்டமிட்ட மத நடவடிக்கைகளுக்குப் பதிலாகச் செயற்படுகின்றோமென்று எண்ணிக்கொண்டு, இந்தியாவினை இந்துக்கல்லூரி உதவிக்கு அழைக்கமுடியாது. சைவ அமைப்புகளை நாடுங்கள். மேலாக, புலம்பெயர்ந்த இந்துக்கல்லூரியின் மைந்தவர்களை அணுகுங்கள். அவர்கள் செய்வதற்கு எத்தனையோ உண்டு. செய்யக்கூடும். ஆனால், தயைகூர்ந்து இந்தியாவின் நலனைமட்டுமே கொண்டு நடக்கும் நடராஜன் போன்றவர்களை அழைத்து, உதவும் பழைய மாணவர்களிலே கணிசமானவர்களையும் விலகச் செய்துவிடாதீர்கள். பழையமாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளர் பலரின் சேவைகளைத் தூர இருந்து எடுத்தெறிந்து விமர்சிப்பதை நான் இங்கே செய்யவில்லை என்று நம்புகிறேன். இவ்வமைப்பிலே இருக்கின்றவர்கள், அதிபர், உப அதிபர் உட்பட்ட பலரோடு கூடப் படித்தவன், நாற்பத்தைந்தாண்டுகளுக்கும் மேலான காலத்து நண்பன் என்றளவிலே கூடப்படித்த பாடசாலை குறித்த ஆதங்கத்திலே எழுதிய தனிப்பட்ட என் கருத்து மட்டுமே இது.

Thursday, June 15, 2017

வெம்மையின் நிறம் சிவப்பு


மூதூரின் இரு பாடசாலைச்சிறுமிகளின்மீதான பாலியல்வன்முறை, The Daily Mirror இன் யாழ்ப்பாணசமூகத்தின் மீதான சாதியக்குற்றச்சாட்டு, வடமாகாண நீர்ப்பங்கீடும் பிரிப்பிலே கடுப்பும். விக்கினேஸ்வரன்  - ஐங்கரநேசன் சொக்கட்டானாட்டம் என்பவற்றிலே, மையமான குற்றச்சாட்டுகளிலும்விட அவற்றினை வைத்து பல சாராரும் நடத்தும் அவரவர் தேர்ந்த அரசியல் (அரு)வெறுப்பினை ஏற்படுத்தி நாம் சார்ந்த சமூகம் தொடர்பான அவநம்பிக்கையைப் பெருக்குகின்றது.

அண்மையிலே The Daily Mirror யாழ்ப்பாண வைத்தியசாலையிலே இரத்தம் சேமிப்பிலே அதிகமில்லாததற்கு யாழ்ப்பாணத்திலே நிலவும் சாதியமே காரணமென்றும், உயர்சாதியினர் என்று தம்மை அழைத்துக்கொள்கின்றவர்கள் தமது இரத்தம் மற்றவர்களுக்குக் கொடையாகக் கிட்ட விரும்பவில்லை என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சத்தியமூர்த்தி சொன்னதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. கூடவே, இரத்தம் அனுராதபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தேவைப்பட்டவர்களுக்கு உதவியாகக் கிட்டுகின்றது என்றும் சொல்லப்பட்டது.

இச்செய்தி The Daily Mirror இலே வந்தவுடன் எதுவித ஆய்வுமின்றி, உடனடியாகத் தங்கள் சொந்தக்கருத்தினையும் சேர்த்துக்கொண்டு, “"இப்ப எல்லாம் யாரு சாதி பாக்குறாங்க..." தலித்துகளுக்கு இரத்த தானம் செய்ய ஆதிக்க சாதியினர் தயாரில்லையாம். இது யாழ்ப்பாணத்தில்.... மூன்று தசாப்த யுத்தத்தில் இரத்தக் குளியலுக்கு உள்ளான ஊரா இப்படி கேட்கிறது...” என்ற குரலோடு எழுதியவர்கள், இத்தனைக்கும் தொடர்ச்சியாக 90 இலிருந்து பத்திரிகைத்துறையிலே இருக்கின்றதாகச் சொல்லிக்கொள்கின்றவர்கள். பத்திரிகையாளர்கள் என்றளவிலேனும் இவர்கள் கொஞ்சமேனும் செய்தியினைச் சரி பிழை பார்த்து ஆய்ந்து வெளியிட்டிருக்கவேண்டாமா?

இக்குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு, யாழ்ப்பாண சைவவேளாளமேலாதிக்கத்தின் சாதியவெறியைப் பற்றி மட்டுமே விடாது பேசுகின்றவர்கள்,

1.    பழைய ஆயுதம் தாங்கிய தமிழ் விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தற்சமயம் ஶ்ரீலங்கா அரசின் தார்மீகத்திலே நம்பிக்கை வைத்திருப்பவர்கள்

2.    பாலஸ்தீனமும் காஷ்மீரமும் அடுத்தார் தளைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும்-ஆனால், ஈழம் என்பது தனக்குத் தானே ஒரு சமூகம் தேர்ந்துகொண்ட தளை என்று ஓராடியாக நிற்பவர்கள்


3.    இலங்கையின் மற்றைய பிரதேசங்களிலும் சமூகங்களிலும் சாதியமோ மதப்பிணக்குகளோ இல்லையென்று கவனமாகப் பாசாங்கு பண்ணுகின்றவர்கள்

4.    உலகளாவிய மக்கள் புரட்சியைக் கொணர உழைக்கும்போது, ஈழம் என்ற கருத்தாக்கமே சாதியமென்றும் அமெரிக்க, உயூத சதியென்றும் வலைப்பக்கங்களினை நிரப்புகின்றவர்கள்


5.    பரபரப்புக்கும் சமூகவலைத்தளங்களிலே புரட்சியாளர்களாக உலாவவும் வசதியான கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக்கொள்ளக்கூடிய போராட்டங்களை நிகழ்த்தும் புனைகதை|பத்தி எழுத்தாளர்கள், உலகமகாநடிகர்கள்

இச்செய்தியின் தொடர்ச்சியாக, The Daily Mirror இன் ஆசிரியருக்கு வைத்தியர் சத்தியமூர்த்தியின் மறுப்புக்கடிதம் இணையத்திலே வெளிவந்து பகிரப்பட்டது; தான் அப்படியாகச் சொல்லவில்லையென்றும் யாழ்ப்பாண வைத்தியசாலையிலே போதியளவு இரத்தம் உண்டென்றும் கூறியிருந்ந்தார். கூடவே, தன்னோடு தொடர்பு கொண்ட The Daily Mirror இன் செய்தியாளரே தன்னிடம் “சாதிப்பிரச்சனை காரணமாக, இரத்தத்தட்டுப்பாடு இருக்கின்றதா?” என்று கேட்டதாகவும் தான் அதை அப்போதே மறுத்துச் சொன்னதாகவும் சொல்லியிருந்ந்தார். வேறு சிலர் சத்தியமூர்த்தியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு இச்செய்தியின்பின்னாலே நிகழ்ந்ததின் திட்டமிட்ட பொய்க்கட்டமைத்தல் மீதான மறுதலிப்பு விளக்கத்தைப் பெற்று இணையத்திலே போட்டார்கள்; ஏன், The Daily Mirror கூட மன்னிப்பினை உடனடியாகக் கோராமல், வெறுமனை செய்தி தவறு என்று (போட்டாலும், விழுந்தும் தாடியிலே மண்ணொட்டவில்லை என்றபோல, “இரத்தக்கொடை தடைப்படுமளவுக்குச் சாதியம் இல்லை” என்ற வரிகளோடு) ஒரு குறிப்பு வெளியிட்டிருந்தது. குறித்த பத்திரிகைக்கும் அதைச் சேர்ந்த வாசகர்களுக்கும் அது வெளிவரும் பிரதேசத்துக்குமான பேரின அரசியலுண்டு. ஶ்ரீலங்காவின் இராணுவவீர்ர்களின் இரத்தம் அவர்களின் கொடையினாலே தமிழ்மக்களிடமும் ஓடுகின்றது என்று இப்படியான பத்திரிகைகளே செய்தி வெளியிட்டு வெகுகாலமில்லை. அதன் அடுத்த கட்டச்செயற்பாடாக, யாழ்ப்பாணத்திலேகூட (சாதிவெறியினாலே) இரத்தம் கொடுக்கப்படவில்லை என்பதைக் கட்டமைக்கும் தேவை அவர்களுக்குண்டு என்பதை அறியப் பெரிய ஆய்வு தேவையில்லை. பொறுப்பு வைத்தியரைச் செவ்வி கண்ட The Daily Mirror இன் செய்தியாளரோ தானேதானா அக்கேள்வியினைக் கேட்டார் என்பதைக்கூடச் சொல்லாமல், தான் கண்ட செவ்வியினை The Daily Mirror இன் சீர்படுத்து உதவியாசிரியர்கள் தவறாக மாற்றிப் பிரசுரித்துவிட்டார்கள் என்கிறார். பத்திரிகையோ மன்னிப்பினைக் கேட்காமலே, பழைய செய்தியினைக் கழற்றிவிட்டு, ஆனால், இன்னமும் சாதிப்பிரச்சனை இருந்தாலும் இரத்தச்சேமிப்புக்குப் பங்கமில்லை என்றவாறு வைத்தியரின் மறுப்புக்கருத்தினைச் சட்டை செய்யாமல், செய்தி வெளியிடுகின்றது.  

இந்நிலையிலே, நெறியான பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள், உலகமகாபுரட்சி மார்க்ஸியர்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்? குறைந்தளவு தங்கள் அவரச் அவசரக்குறிப்புகளுக்கு மன்னிப்பினைக் கேட்டுக்கொண்டு, செய்தி வெளியிட்ட பத்திரிகையின் அரசியலைக் கடிந்திருக்கவேண்டும் இவர்களிலே ஒருவர்கூட அதைச் செய்யவில்லை. அப்படியான தங்களின் தவறான செயற்பாடுக்குத் தார்மீகப்பொறுப்பெடுக்கும் நேர்மைத்திறனின் சொட்டுகூட இவர்கள் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மாற்றாக, இவர்கள் செய்வதென்ன? தொடர்ச்சியாக, யாழ்ப்பாணத்திலே சாதியம் இருக்கின்றதை நிறுவுவதினையே இப்பொய்யான செய்தி சுட்டுவதாகச் சொல்லிக்கொண்டு மேலே யாழ்ப்பாணத்தினைச் சாடுவதிலேயே மாற்றுக்கருத்தும் நெற்றிக்கண்ணாகவும் நிற்கின்றார்கள்; சிலர், இன்னமும் மேற்படி போய்,,சத்தியமூர்த்தி அப்படி ஒரு சாதி உள்ளிட்ட இரத்தம் வழங்குவதிலே தடையேற்படும் பிரச்சனை இல்லை என்று தன் மறுப்புக்கடிதத்திலே சொன்னதைப் புறம் தள்ள, மீண்டும் முதலிலே பொய்யான செய்தியைச் சொன்ன The Daily Mirror இன் “இன்னமும் சாதிப்பிரச்சனை இருந்தாலும் இரத்தச்சேமிப்புக்குப் பங்கமில்லை” என்ற இரண்டாம் செய்தியினை வைத்தே வைத்தியரின் நேர்மையினைக் கேள்வி கேட்டுக்கொண்டும் யாழ்ப்பாணத்தின் சாதியத்தினைப் பிடித்துக்கொண்டும் நிற்கின்றன.

இச்செய்தியின் பின்னணியிலேயான இந்நிகழ்விலே, இங்குப் பிரச்சனை யாழ்ப்பாணத்திலே சாதியம் இருக்கின்றதா இல்லையா என்பதல்ல, ஆனால், பத்திரிகைத்துறைக்கு இருக்கவேண்டிய வழுவா நேர்மையினதும் துறைசார்நெறியினதும் மீதான கேள்வியும் அவை சறுகியவிடத்து அவைமீதான கண்டனத்தின்மீதாக மெய்யை மீட்டலுமாகவிருக்கவேண்டும். இஃது எவ்வகையிலும் யாழ்ப்பாணத்திலே சாதியமே இல்லை என்பதை மறுப்பதாகக் கருதப்படக்கூடாது. சாதியமென்பது, அடித்தலுக்கு ஒளிந்து 2009 வரை தலையை வெளித்தெரியாவாறு வேரோடிமட்டும் காட்டிக்கொண்டிருந்தாலுங்கூட, 2009 இன் பின்னாலே வெளிப்படையாகக் கோரமுகத்தை யாழ்ப்பாணத்திலும் காட்டுகின்றது; காவி வந்து புலம்பெயர்பூமியிலும் காட்டுகின்றது; அதே சாதியம், கிழக்கிலும்  நிலவுகின்றது; மலையகத்திலும் நிலவுகின்றது; சிங்களபௌத்தவர்களிடமும் நிலத்திலே கீழே வேர்விட்டு நிற்கின்றது; தமிழ்க்கிறீஸ்தவர்களிடமும் சமயத்துக்கு அப்பாலும் கடந்து காவப்பட்டுக்கிடக்கின்றது. இருப்பினும்கூட, தனியே யாழ்ப்பாண சைவ வேளாளவெறியினை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சாடுவது வழமைபோல, உங்களின் அரசியல்|பிரதேச|சமூக வசதிக்கானால், அதைத் தொடர்வது உங்களின் விருப்பம். ஆனால், இவ்விடத்திலே முதன்மையானது, குறிப்பிட்ட பத்திரிகையின் மெய்மை பற்றிய கேள்வியும் கண்டனமும்; அடுத்தது, யாழ்ப்பாணத்தின் சாதியம் எத்துணை கொடிதாகவிருப்பதாகக் கொண்டாலுங்கூட, இரத்தம் பகிர்ந்தளிக்கமாட்டாதவளவுக்குக் கேடு கெட்டதாகவிருக்க ஆதாரமில்லை என்பதுமேயாகும். யாழ்ப்பாணத்தின் சாதியத்தினைக் கேள்வி கேட்கவும் அதைச் சாடவும் வேறொரு சந்தர்ப்பத்தினைக் கொள்ளலாம்; இவ்விடத்திலே முதலாம் குற்றவாளியும் ஒரே குற்றவாளியும் குறிப்பிட்ட பத்திரிகை; ஆதாரமற்ற இச்செய்தியினைச் சாட்டிக்கொண்டு, யாழ்ப்பாணச்சாதியத்தினைத் தாம் சார்ந்த அரசியல்களின்பொருட்டு சாட ஒரு சந்தர்ப்பத்தினைத் தேடுகின்றவர்கள் தாமே இரண்டாம் குற்றவாளிகள் வரிசையிலே வந்து நிற்பார்கள். நேர்மைத்திறனற்ற, சொந்த அரசியலுக்காக, பொய்யைக்கூட ஆதாரமாகக் கொள்ளும் நீங்களெல்லாம் வாராவாரம் பத்தி எழுத்துக்கட்டுரைக்கும் பத்திரிகையாளர்களாகவும் குறிப்பிட்ட சமுதாயத்திலேமட்டும் சாதிமறுப்பாளர்களாகவும் தேவைப்பட்ட புள்ளிகளிலேமட்டும் மார்க்ஸியக்கட்டுடைப்புப்புரட்சியாளரும் இருந்து என்ன பயன்?

பொய்யை ஆதாரமாக்கி, நேர்மையான போராட்டங்களை நடத்தி நியாயமான இலக்குகளை எட்டமுடியாது; கூகைகளோடும் சாத்தான்களோடும் கூட நடந்தும் கோட்டையைப் பிடித்து ஏதும் பயனில்லை. 

இவர்கள் எல்லோரையும்விட, இப்படியாக ஒன்று சறுக்கியது என்றே காட்டிக்கொள்ளாமல், விக்கினேஸ்வரன் - ஐங்கரநேசன் என்று தாயம் விளையாடிக்கொண்டிருப்பவர்களுக்குப் பார்வையாளர்களாகவிருக்கின்றவர்கள் பரிசுத்த யோக்கியவான்களென்று கருதுவோமாக!

Saturday, June 03, 2017

க்

அவுஸ்ரேலியாவிலே தமிழ்க்காவலாளி ஒருவர் ஏதிலியாக விண்ணப்பித்திருக்கும் ஒரு பெண்ணை அனுமதியின்றி முத்தமிட்டது தொடர்பாகப் பீத்திக்கிழிப்பவர்களிலே பாதிப்பேர் மூதூரிலே பாடசாலைப்பிள்ளைகளுக்கு நடந்ததைப் பற்றி மூச்சே விடமாட்டார்கள் என்கிறார்கள். மூதூரிலே நிகழ்ந்ததுக்குத் தாம்தூமென்று துள்ளுகின்றவர்கள், முத்தமிட்ட எச்சிலைத் துடைத்துவிடாமற்கூடப் போகின்றார்கள்.

எவரும் பிறாண்டமுன்னால், இவ்விரு நிகழ்வுகளையும் காணாமற்போங்களென்பதாக நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், கண்டிப்பதிலும் இருக்கின்ற அரசியலையும் பேசவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காற்பாதித்தமிழ்த்தேசியத்தைத் தாங்கவும் தாக்கவும் ஒரு சாராரும் முஸ்லீம்கள் என்பதாலே தாக்கவும் தாங்கவும் மறு சாராரும் தேர்ந்தெடுத்து அடுத்தாரையும் அடுக்காரையும் குறித்து இரண்டு வரிகள் எழுதிவிட்டுப்போகிறார்கள்.
எல்லோருக்கும் நல்லாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்துணைதான் பிடிபடாமல் நெளிந்து நழுவிப்போகத் திறனுடைத்தார் இவர்கள்!

இலக்கியத்துக்கும் உண்டு இலக்கிட இலக்கணம்!

94

எண்பதுகளிலே ஒரு பலமான தமிழ்நாட்டு எல்லைக்குமப்பாலுமான தமிழ்த்தலைவராகக் கண்டபோதும், இன்றைய கருணாநிதியிலே எனக்கு எதுவித கருணையுமில்லை. 2009 இலே அவர் காட்டிய பாதிநாள் தின்னாநோன்பு நாடகம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருப்பவர்களுக்குமானதுமல்ல.2009 இன் முள்ளிவாய்க்கால் முடிவுக்குக் காரணம் கருணாநிதியுமல்ல; பிரபாகரனுமல்ல; இவர்களுக்குமப்பாலுமான பெருங்காரணிகளும் காரணர்களுமிருந்தார்களென்றே நம்புகிறேன். 1989 இலிருந்து 2009 வரை தமிழ்த்தேசியம் பேரிலே அந்தப்புறம் இந்தியாவும் இந்தப்புறம் ஶ்ரீலங்காவும் என்ற அமுக்கும் இரு பாண்துண்டுகளிடையே வதக்கிய இறைச்சியாய் ஓரமைப்பு நின்று இருபதாண்டு நின்று பிடித்ததற்கு அதன் அடித்தளத்தினைத் தமிழ்நாட்டின் அரசியல்மாற்றங்களோடு அப்படியே தங்கவிட்டுப்போகவிடாததிலேதான். இவ்விடத்திலே 2009 இன் வாய்க்கால்முடிவுக்குக் கருணாநிதியினைத் திட்டித் தொலைப்பதும் பிரபாகரனை பேசித் தள்ளுவதும் அவரவர் அகவெப்பத்தைக் கொட்டித்தள்ள வழிப்படுத்துமேயொழிய நிதானமான கருத்தாகா.

எத்துணை மோசமான தேச இராணுவத்தினை அனுப்பி வைத்தாளென்றாலுங்கூட, அவ்விராணுவத்தின் செயற்பாடுகளுக்காக நேர்மையான தலைவராகப் பொறுப்பெடுக்க மறுத்தாலுங்கூட, அரசியல்வாதி ராஜீவ் காந்தியின் கொலை எவ்வகையிலே பார்க்கும்போதும் அநாவசியமானது; அதனாலே, கருணாநிதியும் பிரபாகரனும் பாதிக்கப்பட்டார்கள் என்றே நம்புகிறேன். ஆனால், கருணாநிதி தமிழ்த்தலைவரென்ற தட்டிலிருந்து வீழ்ந்ததுக்கும் பிரபாகரன் முள்ளிவாய்க்காலிலே முடிவினைக் கண்டதுக்கும் ராஜீவ் காந்தியின் முடிவு எவ்வகையிலும் காரணமில்லை. அதன் பிறகும் இவ்விருவரும் ஆட்சியிலே இருந்த காலமுண்டு. கருணாநிதிக்கும் காங்கிரஸோடும் பாஜகவோடும் கூட்டணி கொள்ளவும் முடிந்ததும் ஆண்டதும் இப்பிற்காலத்திலேதான். அதனாலே, இராஜீவ் கொலையாலேதான் கருணாநிதியின் அரசியல் பாதிக்கப்பட்டது என்று திமுக இணைய உடன்பிறப்புகள் -வைகோ, சீமான், நெடுமாறன் தொண்டர்கள் மேலான கோபத்திலே- புலம்புவது ஒவ்வாது. அதுபோலவே, கருணாநிதியின் தின்னாநோன்புதான் முள்ளிவாய்க்காலுக்கு முடிவு என்பதுபோல, கருணாநிதியினை ஈழத்தமிழர்களிலே சிலர் இன்று அவரின் பிறந்த நாளிலுங்கூட தரக்குறைவாகத் திட்டுவதும் ஏற்புடைத்ததல்ல.


ஈழத்தமிழரைப் பொறுத்தமட்டிலே இன்றைக்கும் ஜெயலலிதாவைவிடக் கருணாநிதி கவனத்தினை வைத்தவர் என்றே திடமாக நம்புகிறேன். கருணாநிதியினைத் திட்டுகின்றவர்கள் ஜெயலலிதாவைத் திட்டாததற்குக் காரணங்கூட, அவர்களுள்ளே கருணாநிதியிடமிருந்த தமிழர்நலன் குறித்த எதிர்பார்ப்பு ஜெயலலிதாவிடமிருக்குமென்று எண்ணாததுதான் என்றுதான் படுகின்றது. ஆனால், அவரின் - சொல்லப்போனால், அவரின் பிள்ளைகளின் - அரசியல் இருப்பும் தக்கவைத்துக்கொள்ளலும் அகவை நொய்யவைத்தவருக்குத் தேவையாகிப் போனதென எண்ணுகிறேன். என்றாலும், 2009 வைகாசி வீழ்ச்சியினை சுற்றிய காலத்திலும் அதற்குப் பின்னாலான காலத்திலும் முத்துக்குமரன் மரணம், மகிந்த ராஜபக்‌ஷவைச் சந்திக்கக் கனிமொழி+பாலுவை அனுப்பியது, இழப்பின் ஈரம் காயமுன்னாலே உலகத்தமிழ்மகாநாட்டிலே தனக்குத் தமிழ்த்தலைவனாக (||மீண்டும்||) முடிசூடிக்கொண்டது இவை அவர்மீதிருந்த எஞ்சிய மரியாதையையும் நிதானமான தமிழ்ப்பார்வையாளர்களுக்கும் துடைத்தெறிந்துவிட்டது.
அவரவர் தனியாள் அரசியலைப் பொறுத்தவரையிலே கருணாநிதிக்கும் பிரபாகரனுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடுண்டு. பிள்ளைகளாலே கருணாநிதி முடிந்துபோனார். பிரபாகரனாலே பிள்ளைகள் முடிந்துபோயினர்.

போராட்டத்தின் தேவையையும் வந்த, நில், செல் திசைகளையும் முறைகளையும் கவனம் கொள்ளாது பிரபாகரனுக்குத் தம்மரசியலுக்காகப் (சாணிச்சுவர், இணையச்சுவர்) போஸ்ரர் அடித்துப் பிறந்தநாள் கொண்டாடுகின்றதுமட்டுமே போராட்டமென்பதானவர்களிலிருந்து விலகி நிற்கத்தான் முடிகிறது. அதுபோலவே, கிஞ்சித்த அக்கறையும் இன்றைக்கு எனக்கில்லாத கருணாநிதியின் பிறந்தநாளன்றின்போது, அவரின் மீது தரக்குறைவாகக் கருத்துகளை நிதானம் தவறிக் கொட்டுகின்றவர்கள்மீது, அவர்கள் தமிழ்த்தேசியத்திலே நம்பிக்கை கொண்டவர்களாகவிருக்கின்றபோதுங்கூட, எட்டி நிற்கவே விழைவுகொள்கிறேன். குறைந்தளவு கருணாநிதியின் அரசியல், அவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருப்புகளைக் கவனத்திலே கொண்டு தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட விளைவுகளை மையப்படுத்தியது என்பதை இப்படியாகத் திட்டித்தொலைக்கின்றவர்கள் புரிந்தால் தெளியும். வாழ்த்த விருப்பமில்லாவிட்டாலுங்கூட, திட்டாமலிருப்பதுதான் பண்பு.


கடைசியாக, கருணாநிதியை திட்டுவதாலோ பிரபாகரனைத் திட்டுவதாலோ நிகழ்|செல்லரசியலிலே ஏதும் நமக்காக மாற்றம் நிகழ்ந்துவிடாது என்பதை எரிச்சலைத் தீர்த்துக்கொள்தலுக்குமப்பால் நாம் புரிந்து கொள்ளாதவரையிலே ஈடேற்றம் நமக்காக ஒரு நனோமீற்றர் நகர்வையும் காணாது.

Sunday, May 21, 2017

ஒத்தோடிகள்: சிக்கல் ஒன்று

ஒத்தோடிக்கும்பலினதும் அவைபோட்ட விதைகளினதும் இவற்றுக்கு ஈடான மே 18 இற்குத் தமிழகத்திலிருந்து வன்மத்தினையும் காழ்ப்பினையும் கக்கிய கும்பலினதும் தொடர்ச்சியான தமிழ்த்தேசியம் தொடர்பான செயற்பாடுகள் (புலிகள்மீதான தாக்குதல் உட்பட) ஆதாரங்களுடன்கூடியவையாகப் பெருமளவிலே இருப்பதில்லை; அழுத்தமாக வடிவமைக்கப்பட்ட உளநிலைத்தாக்குதலாகவேயிருக்கின்றன.

இலங்கை முஸ்லீம்கள் நிலை தொடர்பாக, இலங்கையிலே சாதிவெறி தொடர்பாக, இலங்கையிலே மதவெறி தொடர்பாக, இலங்கையிலே பிரதேசவாதம் தொடர்பாக, இலங்கையிலே மலையகத்தமிழரின் நிலை தொடர்பாக, இலங்கையிலே பெண்கள்மீதான வன்முறை தொடர்பாக நிகழும் எதையும் தமிழ்த்தேசியத்தின் தேய்கூற்றின் விளைவுகளாகவும் புலிகளின் வலதுசாரியகூற்றாகவுமே வெறும் வார்த்தைகளாலே திரும்பத்திரும்பக் குழுக்களாக வந்து உச்சரித்து, தரவுத்திரிபும் வரலாற்றுக்கோணலும் செய்வதே இவர்களின் முழுச்செயற்றிட்டமாகவிருக்கின்றது. குறைந்தபட்சம் தமிழ்த்தேசியத்தினுள்ளேயே முற்போக்கு, பிற்போக்கு, நடுப்போக்கு, நற்போக்கு, வயிற்றுப்போக்கு என்று பல போக்குகள் இருக்கக்கூடும் என்ற ஆதாரக்கருத்துநிலையையே மறுக்கும் வன்முறையாளர் இவர்கள்.

சீமான், சச்சிதானந்தம், காசி ஆனந்தன், சம்பந்தர், நெடுமாறன் செய்யும் அத்தனைக்கும் தமிழ்த்தேசியத்தையும் (அழிந்துபோன புலிகளையுமே) பொறுப்பேற்கக் கேட்கும் இவர்கள், புலியெதிர்ப்பு & தமிழ்த்தேசியமறுப்பு இவற்றின்பாற்பட்ட பொதுவொற்றுமைக்கு அப்பாலே தம்மிடையே இருக்கும் பல வகையான கருத்துநிலைகளை என்னவென்று சொல்வார்கள்? அவர்கள் அத்தனைபேரினையும் ஒரே வகை ஒத்தோடிச்சதை & விதைக்கும்பல்களாகப் போட்டுவிட்டால் ஒத்துக்கொள்வார்களா?

முஸ்லீம்கள்மீது புலிகளின் வன்முறைகள் என்று பேசுகின்றவர்கள் தொடர்ச்சியாக, கிழக்கிலே முஸ்லீம்கள் மீது (காத்தான்குடி & வாழைச்சேனை) பகுதிகளிலே முஸ்லீம்கள்மீது வன்முறை நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் புலிகளிலிருந்து பிரிந்துபோன கருணா|பிள்ளையான் குழுவினருக்கு ஆலோசகர்களாக இன்றைக்கும் இருப்பதைப் பற்றிப் பேசுவதோ விமர்சிப்பதோ இல்லை; முஸ்லீம்களைக் காத்தான்குடியிலே கொன்ற காலகட்டத்திலே புலிகளின் கிழக்கு இராணுவத்தின் "கேணல்" ஆன கருணாவினைப் பிறகு கொழும்புக்குத் தப்பிப்போக வைத்த முஸ்லீம் அரசியல்வாதியின் சகவாசம் பற்றிப் பேசுவதில்லை. இந்திய இராணுவம் போனபின்னால், கிழக்கிலே ஶ்ரீலங்கா அரசு- புலிகள் பிரச்சனை தொடங்கியதற்கு புலிகளின் முஸ்லீம் தையற்காரர் தாக்கப்பட்டதும் ஒரு "வெளிப்படையான" கூறு என்பதைப் பேசுவதில்லை; முதலிலே முஸ்லீம்கள்மீது கிழக்கிலே தாக்குதல் புளொட்டினாலேதான் அக்கரைப்பற்றிலே நிகழ்ந்தது என்பதைப் பேசுவதில்லை; தாம் முஸ்லீம்களைத் தாக்குவதே தம் பணியென அலையும் பொதுபலசேனாவின் விஷக்கொடுக்கோடு படத்திலே தலித்துகள் பேரிலே கூட நின்று சிரித்துக்கொண்டிருப்பதை விமர்சிக்க மறுக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும்மேலாக, முஸ்லீம் ஊர்காவற்படை ஶ்ரீலங்கா விஷேட அதிரடிப்படையோடு சேர்ந்து தமிழ்க்கிராமங்களிலே செய்த தாக்குதல்களைப் பேசுவதில்லை; வீரமுனைக்கொலைகளைப் பற்றிப் பேசுவதில்லை.

இயக்ககாலங்களுக்குமுன்னாலேயிருந்தே கிழக்கிலே புட்டும் சீனியும் தேங்காய்ப்பூவுமிருக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்வதில்லை. தமிழ்-முஸ்லீம் என்று மாறிமாறியிருக்கும் கிழக்கிலே தொடர்ச்சியான இன உரசல்களிருந்ததைப் பேசியதில்லை; ஹிஸ்புல்லா சைவக்கோவில்நிலத்தை முஸ்லீம்மையவாடி ஆக்கியதைப் பகிரங்கமாக முஸ்லீம்வாக்குவங்கி நிரப்பும் நோக்குடன் வெற்றிச்சாதனையாகப் பேசும் ஒளிப்பதிவாக்கி விட்டதை விமர்சித்துப் பேசுவதில்லை. அதிகம் வேண்டாம், காத்தான்குடிக்கொலைகளுக்கு அனைத்துத்தமிழர் முதுகுகளிலும் பிரம்படிக்கும் ஷர்மிளா ஸையத் போன்றவர்களைக்கூடப் பேசவிடாது ஒடுக்கும் - ஞானசார, சச்சிதானந்தம் & கூல் போன்றோரின் பௌத்த, இந்து & கிறீஸ்தவ மதவடிப்படைத்தனத்துக்கு ஈடான- மத அடிப்படைவாதத்தைப் பற்றி, தமக்கெதிராக வரக்கூடிய பாதகங்களை எண்ணி விமர்சிக்கமுனைவதில்லை.

அண்மைக்காலத்திலே, தமிழரசியல்வாதிகள் ஓட்டுவீடு-சக்கரவண்டி என்று தமக்குள்ளே பிணக்குப் பட்டுக்கொண்டிருக்கையிலே முஸ்லீம் அமைச்சர்களாலே கிழக்கிலே அரசுப்பதவிகள், காணிப்பகிர்வுகள் இவற்றிலே நிகழும் இன விகிதாசாரத்துக்கு ஒவ்வாத கொடுப்பனவுகள், மட்டக்கிளப்பின் எருமைத்தீவின் காணிகளைத் தமிழர்களிடமிருந்து வாங்கி காத்தான்குடியோடு இணைத்து, காத்தான்குடியினை மாநகரசபையாக்கும் திட்டம் என்பன ஈழத்தென்கிழக்கிலே தமிழர்களிடையே இந்துத்துவாவினையும் ஏன் பொதுபலசேனா ஞானசாரவினையும் உள்ளே கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றன. இது நெருப்புக்கு அஞ்சிக் கிணற்றிலே குதித்த கதை. 😞

மறுபக்கம், ரிஷாட் போன்றோரின் ஆதிக்கம் முஸ்லீம்களிடையே இருந்துகூட வெறுப்பினைச் சம்பாதித்திருக்கின்றது. எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரின், அவர்களின் உறவினர்களின் காணிகளை ரிஷாட் சொந்த ஊரிலேயே தூக்கிக் கட்டிடங்கள் கட்டிக்கொண்டார். இத்தனைக்கும் இம்முஸ்லீம்கள் மன்னாரிலே தங்கள் சொந்த நிலங்களிலிருந்து புலிகளாலே யாழ்ப்பாண முஸ்லீம்கள்போல வெளியேறச்சொல்லப்பட்டவர்கள். ஶ்ரீலங்கா அரசுடன் இணைந்து அக்காலகட்டத்திலே (90களிலே) மன்னாரிலே ஜிகாத் என்று செயற்பட்ட துணைக்குழுவிலேயிருந்த சில முஸ்லீம் இளைஞர்களின் பேரிலே - எலியைக் கொல்ல வீட்டுக்கூரையை எரித்த கதையாக- வெளியேற்றப்பட்டுப் புத்தளம் போய்ச் சேர்ந்து அங்கும் மற்றைய முஸ்லீம்களுடன் பட்ட அரசியலிலே ஈடுபடாத முஸ்லீம்கள் இவர்கள். ( ரிஷாட்டின் காணி அபகரிப்பிலே சக முஸ்லீம்கள் என்ற அடையாளம் இங்கேகூட அவரைத் தடுக்கவில்லை). சென்ற ஆண்டு கிழக்கிலே நிலாவெளி உப்பளத்தினைத் தன் கைக்குள்ளே கொண்டுவர ஒரு தமிழ் விதானையை வைத்துக்கொண்டு ரிஷாட் படுத்தின கூத்துகளைப் பற்றிப் உப்பளச்சொந்தக்காரர் ஒருவர் சொல்ல அறிந்தேன். (முன்னர் அறிமுகமாகாத இத்தமிழ் உப்பளக்காரரை நான் சந்திக்க நேர்ந்தபோது, வீட்டு விறாந்தையிலே என்னுடன் பேசிக்கொண்டிருந்த என் பாடசாலைக்கால நண்பன் முஸ்லீமாகவிருந்தது இந்த உப்பளக்காரரின் கடும் விமர்சனத்துக்குரியதாகப் போயிற்று ("இவங்களையெல்லாம் வீட்டுக்குள்ளே சினேகிதரெண்டு விடுறியள்; அவங்கள் எங்கடை காணியளை எடுக்கிறாங்கள்"). ரிஷாட் மேலேயிருந்த அவருடைய நியாயமான ஆத்திரத்துக்கு சம்பந்தமேயில்லாத என் சினேகிதனைப் பிடிப்பது மாதிரியான அநியாயம் தோய்ந்த ஒரு மறச்சிந்தையை என்னவென்பது! அவருக்கு எப்படி "விளங்கும் வகையிலே வலுவாய் விளக்கம்" சொல்லி அடக்கவேண்டியதாயிற்று என்பது உபகதை.) ஒத்தோடிக்கும்பல், இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லீம்கள்- புத்தளமுஸ்லீம்களிடையேயான பிணக்கின்பின்னாலே புத்தள முஸ்லீம் தலைவர் பட்டாணி ரஷாக் யாராலே வாழைச்சேனை மலசலகூடத்துள்ளே மர்ஹூம் ஆக்கப்பட்டார் என்றதைப் பேசுவதில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் ஒத்தோடிக்கும்பலுக்கும் அதன் தொங்கு தசை & விதைக்கும்பல்களுக்கு விமர்சனங்கள் ஒருபோதும் இருப்பதில்லை.

அதிகம் வேண்டாம். இங்கிலாந்திலிருந்து கொண்டு தமிழரசியல் தொடக்கம் அனைத்து அரசியலிலும் இலக்கிய அரசியல் செய்யும் மூன்றாம் மனிதர் ஒருவர் மர்ஹூம் அஷ்ரப்பை மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றார்.

இவையெல்லாம் ஒத்தோடிகளின் விமர்சனத்துக்கு ஆளாகமலிருப்பது வியப்பல்ல. புலிகளையும் தமிழ்த்தேசியத்தையும் தாக்குவதற்கு இவற்றினைப் பேசுவது சங்கடத்தை இக்கும்பலுக்குத் தரும். அதனாலே பேசுவதில்லை. புலிகளும் வலதுசாரித்தமிழ்த்தேசியமும் முஸ்லீம்கள்மீதான ஒடுக்குமுறையைப் பிரதேச ரிதியிலும் கருத்துவகையிலும் செய்த காலகட்டமுண்டு. ஆனால், அதற்கு ஈடாக முஸ்லீம் அமைப்புகள், தற்போது முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்கள் மீது செய்யும் வன்முறைகளை மறைத்துவிட்டுல் கறுப்பு|வெளுப்பு நியாயம் பேச முடியாது - குறிப்பாக, முஸ்லீம்கள் மீது வன்முறையைச் செய்ததாகச் சொல்லப்படும் கிழக்கின் பிரிந்துபோன சில புலிகளுக்குத் தற்சமயம் ஆலோசகர்களாக இருக்கின்ற தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களும் அவர்களின் தோழர்களும்.

இப்படியான கேள்விகளெழும்போதெல்லாம் அவற்றினை வாசிக்காதது|கேட்காதது போலவே பம்முவதும் பதுங்குவதும் "ஒற்றைப்படை"த்தமிழ்த்தேசியத்தின் இழிகூறுகளைப் பற்றி விசிலடித்துக்கொண்டிருப்பதாகக் கவனத்துடன் பாவனை பண்ணுதலும் கோழைத்தனமான, ஆனால், ஒத்தோடிகளிடம் (துரோகிகள் என்ற சொல் பொருத்தமானதில்லை; எந்நிலையும் பயன்படுத்தக்கூடாதது. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான அரசியல்நிலைகளை மாற்றும் உரிமை உண்டு; நமக்குப் பிடித்தபோது தியாகிகளாகவும் பிடிக்காதபோது துரோகிகளாகவும் நாம் வகுத்தால், நம்மைவிடக் கருத்துச்சுதந்திரத்தை மறுப்பவர்களிருக்கமுடியாது. அடுத்தாள் கருத்துச்சுதந்திரத்தை மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு, நாம் நம் கருத்துச்சுதந்திரத்தினையும் சுயநிர்ணய உரிமைகளையும் பேசமுடியாது; அருகதையுமற்றோம்) இதைவிட வேறெதையும் எதிர்பாக்கவுமில்லை.

பிரதேசவாதம், சாதியம், பாலொடுக்குமுறை, மத அடிப்படைவாதம் பற்றி இன்னும் தொடவில்லை......

(1)

அரசியலானது நீருலகு

சுன்னாகம் நீரரசியல் சுன்னாகம் நீர்த்தரத்திலும்விட அதீத மாசடைந்தது.

முடிவுகளை வைத்துக்கொண்டு அதற்கேற்ப அறிவியலை ஆற்றுப்படுத்தென்பதும் சக நிபுணர் ஆய்தற்பார்வைக்குட்படுத்தாத தன்முன்னேற்றக்கட்டுரைகளை ஆய்வாதாரங்களாக பார்வை எண்ணிக்கையாகக் கொண்டு மீள்சுழற்சி செய்வதும் அறிவியல் சார்ந்த கேள்விகளை அழித்துவிடுவதும் சுன்னாகம் நீரைச் சுத்தரிகரித்துவிடப்போவதில்லை; நீரை மேலும் கெடுதலடையவே வைக்கும்.


ஆற்றிலிட்ட மாசைக் குளத்திலே தேடுவது தவறில்லை; ஆனால், அதனை அறிவியலின்வழி வழுப்படாத் தரவும் அதன்பாற்பட்ட அலசலின்படியும் செய்யவேண்டும். அதைவிட்டுவிட்டு, தாம் தம் அரசியல், எடுகோள் இவற்றுடன் ஒவ்வாததாலே மறுப்பதும், தன்னார்வத்தோடு தாம் சார்ந்த நிலமென்பதாலே புலம்பெயர்ந்தும் உதவ வந்தோருக்கு அரசியற்சாயம் பூசுவதும் தகுந்த தரவின் அடிப்படையிலான அறிவியல்முடிவுகளை மறுப்பதும் யாருக்குக் கெடுதலாகும்?


அறிவியல் முடிவுகளை மறுக்கையிலே அதற்காக காரணங்களை அறிவியலின் பாற்பட்டு முற்போடவும் தொடர்ச்சியான அறிவியல் & தரவு சார்ந்த விவாதங்களுக்குத் தயாராகவிருக்கவும் வேண்டும். அதைவிட்டுவிட்டு, தமது "மறைந்திருக்கும் காரணங்கள்" என்பதான பொதுப்படையான மறுத்தலுக்கும் குற்றச்சாட்டுக்கும் தரவுகளின் அடிப்படைகளிலே கேட்கப்படும் பின்னூட்டக்கேள்விகளுக்கு பதில் சொல்ல நேர்மைத்திறனின்றி அழித்துவிடுவது நீரின் தாழ்தரத்தாலே இன்னும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மேலும் கெடுதலைக் கொடுக்கமட்டுமே உதவும்.


குறைந்தளவு, ஆய்வின் பாற்பட்ட முடிவுகளை மறுப்பதற்கு ஆய்வுகளைச் செய்தவர்கள் நிபுணர்களில்லை, ஆய்வின் வழிமுறைத்தவறு, உபகரணவழு, செய்கைப்பிறழ்வு காரணங்களென்றால், அவற்றுக்கு மாற்றான இத்தகாக்காரணங்கள் அற்ற ஆய்வுகளைத் தாமேனும் செய்யவேண்டும். அதனை வசதியாகத் தவிர்த்துக்கொண்டு, தம் கருத்துநிலை எடுகோட்களையும் உள்ளூர் அரசியலையும் ஆய்வுக்கு மாற்றாகப் பெயர்த்துக் கொண்டும் மாற்றுக்கருத்துகளைத் தவிர்த்துக்கொண்டும் உலாவுவது நீரையோ நம்மையோ சுத்தம் செய்ய உதவாது.


https://www.facebook.com/vicky.vigneswaran/posts/10154569844766658?

வசவுகளே கருத்து

ஸர்மிளா ஸையத் மீது மத அடிப்படைவாதிகள் திரும்ப எழுத்துவன்முறையைத் தொடங்கியிருக்கின்றார்கள். (1)

ஸர்மிளா பிபிசி- தமிழ்ச்சேவைக்குப் பாலியற்றொழில் குறித்துக் கொடுத்த செவ்வி மிகவும் தீர்க்கமானதாக இருந்தபோது, இணையத்திலே அவருக்கு இதுமாதிரியான எழுத்துவன்முறைத்தாக்குதல் முதலிலே விழுந்தது.

ஸர்மிளா 200% சிறப்பாக வலைச்செவ்விக்கான கேள்விக்கொத்தினைத் தயாரிக்கக்கூடிய ஷோபா சக்தி என்ற அற்புதமான நடிகரின் வலைப்பக்கத்திலே 2014 இலே கொடுத்திருந்த செவ்வியிலே கிழக்கிலே "தமிழர்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது அரச படைகளுடன் சேர்ந்திருந்த சில முஸ்லிம் நபர்களே! பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருந்த புலிகளைப் போன்று பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய அமைப்பெதுவும் தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கவில்லை. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் நபர்களின் தாக்குதல் அரசின் தாக்குதலே என்ற புரிதலே இஸ்லாமிய முற்போக்காளர்களிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணம் என்று நினைக்கிறேன்." என்ற வௌவாற்பதில் அவரும் இரட்டை அளவுகோல்களை வைத்திருக்கக்கூடியவர் என்று எண்ணவைத்தது. இதுபோலவேதான், இருபத்தைந்தாண்டு நண்பராகவிருந்த ஒருத்தரும் பேஸ்புக்கிலே பக்கத்து மாநிலத்திலிருந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டினேன். தற்போது பேஸ்புக்கிலே என்னைத் தடை பண்ணி வைத்திருக்கின்றார் அந்த வஹாபிகொம்யூனிஸ்ட்😁 ஆனால், அஃது இவர்களைப் போன்றவர்களின் மற்றைய சமூக கருத்துகளோடு உடன்பாடு கொள்வதிலே ஏதும் தயக்கத்தைத் தருவதில்லை.

இப்போது மீண்டும் ஸர்மிளா ஸெய்யத் மீது வசவுகளை மேற்கொண்டு மத அடிப்படைவாதிகள் தாக்குகின்றனர். இதனைக் கண்டித்துவிட்டுப்போவது இலகு (அதையும் செய்யாமலிருக்கும் சிலரின் இலக்கியச்சந்தி, முன்னணி, அமைப்பு அரசியல்களுக்கு வலுவான காரணங்களிருக்கலாம்). ஆனால், அதற்குமேலே அவர் வாழும்நாட்டின் சட்டமொன்றும் செய்யாதா? இவ்வகையிலே சின்மயி தும்மவே தூக்கிப்போட்ட சென்னையின் ஜார்ஜுவைச் சொல்லவேண்டும். மஹானுபாவன்!

(1) https://www.facebook.com/photo.php?fbid=539756329713725&set=a.183927345296627.1073741829.100010380886839&type=3

அரசியல் அலட்டல் - மேலுமொன்று

புரட்சித்தமிழர்கள் வெறித்தமிழ்த்தேசியத்தைக் கடந்து பல்தேசியம், தலைதேசியம், காதுதேசியம் என்று பெருந்தேசியம், கண்டம், அகிலம், அண்டம், பிண்டம் என்று விரிந்து தழுவினதாகக் காட்டிக்கொண்டாலும், உணர்ச்சி கொப்புளிக்கின்றவர்கள் என்பதை அவர்கள் எழுதுவதிலே எங்காவது தடக்கிவிழுந்து அசல் தமிழர்களாய் நிரூபித்துவிடுகின்றனர்.

அண்மையில் பாலசூரியன், “புலிகள் ஆயிரக்கணக்கான மற்றைய போராளிகளைக் கொன்று தள்ளினார்கள்” என்ற பொருளிலே ஓரிடத்திலே எழுதி ஓடம் விட்டிருந்தார். கற்றவர் அவருக்கு, குறைந்த பட்சம் பூச்சியம் என்பதாலேமட்டும் ஒன்றுக்குப் பின்னாலே சும்மா சேர்த்துக்கொண்டேபோகக்கூடாதென்று தெரிந்திருக்கமாட்டாதோ? தெரிந்திருக்கும். ஆனால், அடிப்படையிலே அளவெட்டித்தமிழன் என்ற உணர்ச்சி பொங்குதல் தடக்கிவிட்டதோ தெரியவில்லை. எதுக்கும் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்க கொன்ற போராளிகளில்லாத தமிழர்களின் கணக்குகளிலே எத்தனை பூச்சியங்களை எங்கள் சூரியராசா வெட்டுகிறார் என்பதை வைத்தே சொல்லமுடியும்.

இதுபோலத்தான் நேசன் கொஞ்ச வருசத்துக்கு முன்னாலை, “மட்டக்களப்பை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான S.R. சிவராமைப் பற்றி நன்கு அறிந்திருந்த பேராதனைப் பல்கலைக்கழக பல்வைத்தியத்துறை மாணவனான செல்வனால் எழுப்பப்பட்டிருந்த கேள்வி S.R.சிவராம் காதுகளுக்கு சென்றிருந்தது.” என்று எழுதியிருந்தார்.

தொண்ணூறிலே நான் அறிந்த நேசன் அதிகம் பேசாத நிதானமான தீர்க்கமான பெருமதிப்பினை ஏற்படுத்திய மனிதர். வயதோடுகூடி நவாலித்தமிழன் என்ற உணர்ச்சி பொங்குதலிலே கொட்டிவிட்டாரோ தெரியவில்லை. மாமனிதர் தராக்கி ஆகமுன்னால், புளொட் சிவராம் என்றிருந்தவர் பற்றி நேசன் சொல்வதின் நியாயத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாகச் சொல்லப் பேஸ்புக்கிலே பலரிருக்கலாம். ஆனால், அதைச் சொல்வதற்காக, செல்வன் என்ற கிருபா(கரன்) பேராதனைக்கு வந்தார் என்று நேசன் உணர்ச்சி வசப்பட்டிருக்கத்தேவையில்லை.

கிருபா எங்களுக்கு நான்கைந்து ஆண்டுகள் முன்னாலே படித்தவர். எங்களோடு படித்தவர்களுக்கு அவரை தென்னாபிரிக்காவுக்குப் பின்னாளிலே போய்ச் சேர்ந்த பயஸ் மாஸ்ரர் “கெடுத்தவர்களான” ஜான் மாஸ்ரர், ஜெயச்சந்திரன் (பார்த்தன்) போன்றவர்களின் நண்பராகக் கண்டதாலே அவரின் அமைப்புச் சார்ந்து இன்னார்தாமெனத் தெரியும். நோபேட் (கோவிந்தன்) அப்போது திருகோணமலைக் கல்வித்திணைக்களத்திலே வேலைசெய்துகொண்டிருந்தாரென எண்ணுகிறேன். திருகோணமலையிலே சந்தோஷம் மாஸ்ரர் சேர்த்த சிலரைத் தவிர (எப்போதோ தேசியக்கொடியை எரித்துவிட்டுப்போன சார்ள்ஸ் அன்ரனி (சீலன்), தர்மராஜா (புலந்தி அம்மான்) போன்றவரை விட்டால்) புலிக்கென்று எம்மோடு படித்து, எமக்குத் தெரிந்து போனவர்களில்லை( பின்னாளிலே டெலோவின் முக்கியத்தரான அந்நாளின் கூட்டணி ஈழத்துநாதன் வளர்த்த மருமகன் அன்ரனிதாஸ் (சொர்ணம்), வரதீஸ்வரன் (பதுமன்), இசைப்பிரியா பக்கத்திலே நிர்வாணமாக நிறுத்திவைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வசந்தன் போன்று எங்கள் சக வகுப்புகளிலே படித்தவர்களும் ஓராண்டு முன்னாலே படித்த அருணா (கோணேஸ்) போன்றவரும் 83 இன் பின்னாலேதான் போனார்கள்). திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் புளொட்டுக்கும் ஈரோஸுக்குமே ஆரம்பத்திலே அள்ளிக்கொடுத்தன. அத்தனை பேரினையும் நாசம் செய்யக் காரணமான புளொட் தலைமை பற்றி விமர்சனமேயில்லாமல், செத்தபுலியின் வாலை மட்டுமே பிடித்துத் தொங்கும் “எனக்கு ஒரு கண்போனாலும் சரி; சுற்றியிருக்கும் எல்லோருக்கும் இரண்டு கண்களும் போகவேண்டும்” ஆட்களின் ஒற்றைப்பக்க அரசியல் -"இருப்பது சாதிய, பிரதேசப்பிரச்சனைமட்டுமே; இனப்பிரச்சனையென்பது பொய்மை; தமிழ்த்தேசியமென்பது சைவவெள்ளாளயாழ்ப்பாணத்தின் தரப்படுத்துதலுக்கு எதிரான எழுச்சி மட்டுமே; செத்தது ஆக ராஜினியும் சிவரமணியுமட்டுமேயான இரு பரிசுத்த ஆவிகள்மட்டுமே; அமெரிக்க மீட்பர் கூல் ஆயரை நம்புங்கள்; நாளை தேவன் கருணை கிட்டும்" சரமான நைஞ்சுபோன சீனாவெடி- ‘நேர்மை’தாம் நடுவிலே நிற்கும் என்னைப் போன்ற குடியேற்றங்களாலே தொடர்ச்சியாக நிலத்தை இழந்துகொண்டிருக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த நடுச்சந்தி விசரருக்கு எரிச்சலையூட்டுகிறது.

கிருபா பேராதனைக்குப் பல்மருத்துவத்துக்கு எடுபட்டிருந்தாலும் அங்கே வரவேயில்லை. கடைசியாக அவரைக் கண்டது, எண்பத்திரண்டிலோ எண்பத்திமூன்றிலோ திருகோணமலை முத்துக்குமாரசாமி கோவிலின் கும்பாபிஷேகத்திலே. அவர் பக்கத்துத்தெருவென்றபடியாலும் அவரின் அம்மாவும் ஒரு ரீச்சர் என்பதாலும் நன்றாகத் தெரியும் (சென்ற மாதம் இறந்த அவரின் அக்கா, தம்பி உட்பட). ஆனால், சீனியர் என்றளவிலேயும் கேள்விப்பட்ட அவரின் “கொம்யூனிச”ப்போக்கு என்பதாலும் எட்டி நின்று மரியாதையாகக் கேட்டால் கேட்டதுக்குப் பதிலாய் ஓரிரு வார்த்தை கதைப்பதுதான் வழக்கம். கொம்யூனிசக்காரர் கிருபாவைக் கோயிலிலே கண்டது பெரிய ஆச்சரியம். அவரின் ‘குரூப் ஆக்கள்’ கோயிலிலை சாமியாடுறவங்கள், தீமிதிக்கிறவங்கள் எல்லோரையும் கேள்வி கேட்டு, உதெல்லாம் செய்யச் சாமி தேவையில்லை; சாதாரணமாக எவரும் செய்யலாம்” என்று ‘கோவூர்’ காட்டுகின்றவை என்று நண்பர்கள் சொன்னதை வைத்து அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கிருபாவைக் கோவிலிலே கண்டது வியப்புத்தான்.

“உங்களுக்குக் கடவுள்நம்பிக்கையில்லை எண்டு நினைச்சன்!” என்றேன்; கையிலே ஒரு புத்தகம் சுற்றி வைத்திருந்தார்; தூக்கிக்காட்டினார்; தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற ஞாபகம். எனக்குக் கோவைஞானி, சிவத்தம்பி போன்றவர்களின் ‘சாமி-சடங்கு-பொதுவுடமை-ஸ்ட்ரக்சுரலிசம்’ பற்றி அரை மணிநேரம் உரையே ஆற்றினார். அப்பவும் விளங்கேல்லை; இப்பவாச்சும் விளங்கிச்சுது எண்டு சொன்னால், பம்மாத்தாகத்தான் இருக்கும். அப்ப பெரும்கட்டமைப்பும் விளங்கேல்லை எனக்கு; இப்ப பெரும்கட்டுடைப்பும் விளங்கேல்லை.

ஆளைவிடு சாமி என்று திரும்பிக் கோவிலுள்ளே மூலஸ்தானஸ்வாமியைப் பார்த்தால், ஆசாமியை மறுக்கும் குறுக்கு நந்திக்குப் பக்கமாய் மறைக்கும் கொடிமரம் தனிமரமாகிப் போகக்கூடாதெண்டு தோழராய் யூனிவசிற்றி கொன்வக்கேசனுக்கும் விடாது கோட்டின்கீழே கட்டும் வேட்டியைக் கட்டிக்கொண்டு நின்றார் கோவில் மனேச்சர் சிறிதரன் மகன் சீனக்கொம்யூனிஸ்ற் பார்ட்டியின் சிந்தனாவாதி சிவசேகரம்.

அதுதான் கிருபாவைக் கடைசியாய்க் கண்டது. அவர் தான் எடுபட்ட பல்மருத்துவம் கற்கப் பேராதனைக்கு வரவேயில்லை.

மக்கள் பாதையையும் மலராமற்போச்சு! தீர்த்தக்கரையையும் வற்றியே போச்சு!
தீப்பொறியும் உயிர்ப்பு அணைஞ்சே போச்சு!

புலிவாலைமட்டும் வீரம் விளைந்த மண்ணைப் பிடிகாட்டப் பிடிச்சுச் சுத்திக்கொண்டேயிருக்கிறியள்!

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!


"...Now what’s going to happen to us without barbarians?
Those people were a kind of solution...."

                                                                    - C. P. Cavafy